| 5232. | 'தழல் வீசி உலாவரு வாடை தழீஇ அழல்வீர்; எனதுஆவி அறிந்திலிரோ ? நிழல் வீரைஅனானுடனே நெடு நாள் உழல்வீர்;கொடியீர் ! உரையாடிலிரோ ? + |
கொடியீர் -மதிமுதலிய கொடியவர்களே (நீங்கள்); தழல்வீசி - நெருப்பைப் பரப்பி; உலா வரு - திரிந்து வருகின்ற; வாடை தழீஇ - வாடைக்காற்றைத் தழுவி; அழல்வீர் - (என்னைச்) சுடுகின்றீர்; எனது ஆவி அறிந்திலிரோ - என் உயிரின் தன்மை அறியீரோ; நிழல்வீரை அன்னானுடனே- ஒளிவீசும் கடல்போன்ற இராமனுடன்; நெடுநாள் உழல்வீர் - நீண்ட நாட்கள் பழகியிருக்கிறீர்கள்; உரையாடிலிரோ - (உயிர்பற்றிப்) பேசவில்லையோ. நீங்கள்இராமனுடன் பேசியிருந்தால் அவர் என் உயிரின் இயல்பைக் கூறியிருப்பார். நீங்கள் என்னை வருந்தீர். நீங்கள் அவனுடன் அதுபற்றிப் பேசவில்லையோ, பிரிந்தாரை வாட்டும் மதி முதலானவை காவிய நாயகர்களால் இகழப்படும் - நைடதம் முதலானவற்றில் இதைக் காணலாம். வீரை - கடல் - செழுந்தென்றல் அன்றில் .... திரைவீரை என்மேல் பகையாட ஆடும். (திருமாளிகைத் தேவர் - உறவாகிய யோகம். 5 (5) |