| 5234. | 'தரு ஒன்றிய கான் அடைவாய், "தவிர் நீ; வருவென சில நாளினில்; மா நகர்வாய் இரு" என்றனை;இன் அருள்தான் இதுவோ ? ஒருவென் தனிஆவியை உண்ணுதியோ ? + |
(ஐயனே) தரு ஒன்றிய -மரங்கள் சேர்ந்துள்ள; கான் அடைவாய் - காட்டை அடைய விரும்புபவளே; நீ தவிர் - நீ அந்த எண்ணத்தை விடு; சில நாளினில் - சில தினங்களிலே; வருவென் - (நான்) திரும்பி வருவேன்; மாநகர்வாய் - பெரிய நகரின் கண்ணே; இரு - (அதுவரை) இருப்பாபாக; என்றனை - என்று கூறினாய்; இன் அருள் இதுவோ - உனது இனிய கருணை இப்படிப்பட்டதோ? ஒருவென் - தனித்துள்ள என்னுடைய; தனி ஆவியை - ஆதாரம் இல்லாத உயிரை; உண்ணுதியோ - உண்ணுகின்றாயோ. அடைவாய் -அடையும் சமயத்தில் என்றும் கூறலாம். 'நான் கானகம் வந்தால் துன்புறுவேன் என்று என் வருகையை மறுத்த நீ இன்று நான் சிறையில் இருக்கும் போது வாராமல் உள்ளாய். உன் அருள் இப்படிப்பட்டதோ' என்றாள். உயிர் உண்ணுதல் - உயிரை வாட்டுதல். உருக்கி என் உயிரொடும் உண்டு போனவன். (கம்ப. 533) என்று முன்பு பேசுகிறாள். இறைவனுக்கு உயிருண்ணி என்னும் பெயர் உள்ளதை அறிக. (திருவாசகம்) தான் - உரையசை. (7) |