சீதை உயிர்விடத்துணிதல்.

5237.

என்றுஎன்று, உயிர் விம்மி, இருந்து அழிவாள்,
மின் துன்னும்மருங்குல் விளங்கு இழையாள்;
'ஒன்று என்உயிர் உண்டு எனின், உண்டு இடர்;
                                   யான்
பொன்றும்பொழுதே, புகழ் பூணும்' எனா,

     மின்துன்னும் -மின்னலைஒத்திருக்கும்; மருங்குல் - இடையையும்;
விளங்கு இழையாள் - விளங்கும் ஆபரணத்தையும் உடைய பிராட்டி; என்று
என்று -
என்று பலவாறு நினைந்து; உயிர் விம்மி - பெருமூச்சுவிட்டு;
அழிவாள் - வருத்தம் அடைவாளாகிய பிராட்டி; இருந்து - உறுதிபெற்று;
ஒன்று - என்னுடன் ஒன்றுபட்டுள்ள; என் உயிர் உண்டு எனின் - என்
உயிர் இருந்தது என்றால்; இடர்உண்டு - துன்பம் உள்ளதாகும்; யான் -
நான்;
 பொன்றும் பொழுதே -இறக்கும்சமயத்தில்தான்; புகழ் பூணும் - புகழ்
என்னைச் சேரும்; எனா - என்று கருதி.

     துன்னும் - உவமவாசகம் - வட நூலார் வேற்றுமை உருபை ஆர்த்தி
என்றும் கூறுவர் (பிரயோக விவேகம்) இருந்து - வைராக்கியம் பெற்றது.
இழையாள் அழிவாள் - அழிவாள் முற்றெச்சம். எனா - செயா எனும்
வாய்பாட்டுச் சொல். என்று எனும் பொருள் தரும். 'இறந்தால் துன்பம் நீங்கும்
என்று நினைப்பது முறையல்ல' என்பதைப் பிராட்டியின் மூலம் அறிய
இவ்வண்ணம் பேசப்பெற்றது போலும்.                          (10)