கலிவிருத்தம் 5238. | 'பொறை இருந்து ஆற்றி, என் உயிரும் போற்றினேன், அறை இருங்கழலவற் காணும் ஆசையால்; நிறை இரும் பல்பகல், நிருதர் நீள் நகர்ச் சிறை இருந்தேனை,அப் புனிதன் தீண்டுமோ ? |
அறை - ஒலிக்கின்ற;இருங்கழலவன் - பெரிய வீரக்கழல் அணிந்த இராமபிரானை; காணும் ஆசையால் - காண வேண்டும் என்னும் விருப்பத்தால்; பொறையிருந்து - பொறுமையுடன் இருந்து; ஆற்றி - அமைதிப்படுத்தி; என் உயிரும் - என்னுடைய உயிரையும்; போற்றினென் - (நீங்காதபடி) பாதுகாத்தேன். (ஆனால்); நிருதர் நீள் நகர் - அரக்கர்களின் பெரிய நகரில்; நிறை இரும் பல்பகல் - மிகுதியான பல நாட்கள்; சிறையிருந்தேனை - சிறையிலிருந்த என்னை; அப்புனிதன் - அந்த ஒப்பற்ற இராமபிரான்; தீண்டுமோ - தொடுவானோ. சிறையிருப்புஇழிவாகக் கருதப் பெற்றது ஆதலின் பிராட்டி இப்படிப் பேசினாள். ஆனால் பிராட்டி இருப்பால் சிறை புனிதம் பெற்றது. இராமனைக் காணும் ஆசையால் உயிருடன் இருப்பதாகப் பேசினாள். 'புண்ணிய மூர்த்தி தன்னைக் காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன்' - (கம்ப. 7653.) என்று பிராட்டி பின்பு பேசுவாள் போற்றுதல் - காத்தல். போற்றின் அரியவை போற்றல் (திருக்குறள் 613) ஆற்றி - அமைதிப்படுத்தி. இக்கலிவிருத்தம் விளம் - விளம் - மா - கூவிளம் என்னும் 4 சீர்களைப் பெற்றுவரும். இவ்விருத்தம் இந்நூலில் 2177 முறை காட்சி தருகின்றது (மணிமலர். 76) (11) |