5239. | 'உன்னினர்பிறர் என உணர்ந்தும், உய்ந்து, அவர் சொன்னனசொன்னன செவியில் தூங்கவும், மன் உயிர்காத்து, இருங் காலம் வைகினேன்; என்னின், வேறுஅரக்கியர், யாண்டையார்கொலோ ? |
பிறர் - அயலவர்;உன்னினர் - என்னை நினைத்து விட்டார்; என உணர்ந்தும் - என்று அறிந்தும்; உய்ந்து - (அதனால் இறவாமல்) பிழைத்து; அவர் சொன்னன சொன்னன - அயலவர் கூறிய இழிமொழிகள்; செவியில் தூங்கவும் - செவியிலே தங்கியிருக்கவும்; மன்உயிர் காத்து - நிலைபெற்ற உயிரைப் பாதுகாத்து; இருங்காலம் - நீண்ட காலம்; வைகினேன் - சிறையி்ல் தங்கினேன்; என்னின் - என்னைப் போல; வேறு - மாறுபட்ட; அரக்கியர் -அரக்கிகள்; யாண்டையார் - எவ்விடத்துள்ளனர் ? தினைத் துணையாம்பழியும் சான்றோர்க்குப் பனைத் துணையாகும். ஆதலின் பிராட்டி இராவணன் தன்னை நினைக்க நேர்ந்தது குறித்து வருந்துகிறாள். பிறர் நெஞ்சு புகுதல் பத்தினிப் பெண்டிர்க்குத் தகாது என்று பேசியது வேறு. இவர்கள் புகக் கூடாது. பிறர் நினைப்பதால் பழிவரும் என்பது பிழை. யான் பிறர் கருதியும் உயிருடன் வாழ்கிறேன். யானே அரக்கி என்று பிராட்டி நினைக்கிறாள். கொல், ஓ - அசைகள். (12) |