| 5240. | 'சொல்பிரியாப் பழி சுமந்து தூங்குவேன்; நல் பிறப்புஉடைமையும் நாணும் நன்றுஅரோ ! கற்புடைமடந்தையர், கதையுளோர்கள்தாம், இல் பிரிந்துஉய்ந்தவர் யாவர் யான் அலால் ? |
பழிபிரியாச்சொல் - நிந்தையிலிருந்து விலகாத சொற்களை; சுமந்து -தாங்கி; தூங்குவென் - கவலையற்றிருக்கும் என்னுடைய; நல் - நல்ல;பிறப்புஉடைமையும் - சிறந்த குடிப்பிறப்பாகிய செல்வமும்; நாணும் - நாணமும்;நன்று - மிகமிக நன்றாக உள்ளது; கற்புடை மடந்தையர் - கற்புடையபெண்களிலும்; கதை உளோர்கள் - வரலாற்றில் பேசப்படுபவர்களிலும்;இல்பிரிந்து - கணவனைப் பிரிந்து; உய்ந்தவர் - உயிருடன் வாழ்பவர்; யான்அலால் - என்னைத் தவிர; யாவர் - வேறு எவர் உள்ளனர். வாழும் பெண்கள்வரலாற்றுப் பெண்கள், கணவனைப் பிரிந்ததும் இறந்தனர். என்னைப் போல் எவர் உயிருடன் வாழ்ந்தனர். இல் - கணவன். புதுவழக்கு - இல்லாள் என்பதே மரபு. ஆனால் இல்லான் என்று சேக்கிழார் பேசினார் (காரைக்கால்) கவிச்சக்கரவர்த்தியும் அம்மரபைப் பேசுகின்றார் போலும். தாம் - உரை அசை. கதையுளோர்கள் கற்புடைமடந்தையர் என்று கூட்டிக் கதையிலே பேசப்படும் கற்புடைப் பெண்கள் என்று பொருள் கூறப்பெற்றது. கதையின் போக்கை ஆராய்ந்து முடிவு காணுதல் முறை. நன்று - இகழ்ச்சி. அரோ - அசை. (13) |