5242. | 'எப் பொழுது, இப் பெரும் பழியின் எய்தினேன், அப் பொழுதே,உயிர் துறக்கும் ஆணையேன்; ஒப்பு அரும் பெருமறு உலகம் ஓத, யான், துப்பு அழிந்துஉய்வது, துறக்கம் துன்னவோ ? |
இப்பெரும்பழி -இந்தப்பெரிய பழியை; எப்பொழுது எய்தினேன் - எப்போது அடைந்தேனோ; அப்பொழுது - அந்தச் சமயத்திலேயே; உயிர்துறக்கும் - உயிரை விட்டு விடும்; ஆணையேன் - ஆன்றோர் மரபை உடைய யான்; உலகம் - உலக மக்கள்; ஒப்பரும் பெருமறு - ஒப்பற்ற பெரிய நிந்தையை; ஓத - கூறிக்கொண்டிருக்க(கவலைப்படாத); யான் - நான்; துப்பு அழிந்து உய்வது - பெருமை அழிய வாழ்வது; துறக்கம் துன்னவோ - சுவர்க்கத்தை அடையவோ. பழி -இலங்கையில் சிறையிருத்தல். துப்பு - பெருமை. ஆணை - ஆன்றோர் மரபு (கம்பராமாயண அகராதி) துறக்கம் துன்னவோ, எதிர்மறைத் தொனி. உயிர்துறத்தல் - உயிரை விட்டுவிடுதல். பழியின் - என்பதில் உள்ள 'இன்' அசை. கற்பினின் திரிதல் இன்றி (சிந்தாமணி 604) இனியர், 'இன்' அசை என்றார். உலகம் பெரும்பழி ஓத யான் உய்வது துறக்கம் துன்னவோ எனக்கூட்டுக. (15) |