5245.

'வல் இயல்மறவர், தம் வடுவின் தீர்பவர்,
வெல்லினும்வெல்க, போர்; விளிந்து வீடுக;
இல் இயல்அறத்தை யான் இறந்து வாழ்ந்த பின்,
சொல்லிய என்பழி அவரைச் சுற்றுமோ ?

     வல்இயல் மறவர்- வலியஇயல்பை உடைய இராமலக்குவர்கள்; தம் -தம்முடைய; வடுலின் தீர்பவர் - பழிக்குற்றத்திலிருந்து நீங்குபவராய்ப்;
போர்வெல்லினும் வெல்லுக - போரில் வென்றாலும் வெற்றியடையட்டும்;
(அல்லது)விளிந்து வீடுக - இறந்து அழியட்டும்;  (மகிழ்ச்சியோ துன்பமோ
அடையேன்) யான் - நான்; இல் இயல் அறத்தை - இல்லறத்திற்கு அமைந்ததர்மத்தை; இறந்து வாழ்ந்தபின் - கடந்து வாழ்ந்த பிறகு;
சொல்லிய என்பழி- உலகம் தூற்றிய எனக்குரிய நிந்தைகள்; அவரைச்
சுற்றுமோ -
இராமலக்குவர்களைச் சூழுமோ ?.

     யான் அறங்கடவாதுஇருப்பின் என்னை மீட்காத பழி அவரைச் சாரும்
யான் அறங் கடந்ததால் என்பழி அவரைச் சாரா, என்றாள் பிராட்டி அறம்
கடவாது இருந்தும் மனம் நொந்து இங்ஙனம் பேசினாள்.
 யான் இறப்பதால்
அவர்க்குப் பழிவரின் இறப்பது தீது. பழிவராமையால் இறப்பது நன்று என்று
கருதுகிறாள். என் பழி - எனக்குரிய பழி.                        (18)