5252. | 'ஐயுறல்; உளது அடையாளம்;ஆரியன் மெய் உறஉணர்த்திய உரையும் வேறு உள; கை உறுநெல்லியங் கனியின் காண்டியால்; நெய் உறு விளக்குஅனாய் ! நினையல் வேறு' என்றான். |
நெய் உறு விளக்குஅனாய் ! - நெய் நிறைந்தவிளக்கைப் போன்றவளே; ஐயுறல் - சந்தேகம் கொள்ளாதே; அடையாளம் உளது - அடையாளப் பொருள் உள்ளது; ஆரியன் - இராமபிரான்; மெய் உற உணர்த்திய உரையும் - உண்மையுடன் அறிவுறுத்தியசொற்களும்; வேறு உள - தனியாக உள்ளன; கைஉறு -கையிலே உள்ள; நெல்லியங்கனியின் - நெல்லிக் கனியைப் போல; காண்டி- பார்; வேறு நினையல் - என்னை அயலாகக் கருதாதே; என்றான் -என்றான். அடையாளம்,இராமபிரான் வழங்கிய கணையாழி. என்னை அயலாகக் கருதாதே. நெய்விளக்கு, பிராட்டியின் தூய்மையை உணர்த்துகிறது. பிராட்டி, மாயமானால் ஏமாற்றப்பட்டதிலிருந்து எதையும் நம்பாள். இராவணன் துறவு வேடம் கண்டபின் எவரையும் நம்பாள். ஆகையால் ஐயுறல் என்றும் வேறு நினையல் என்றும் அனுமன் பேசினான். என்னை அருள் தூதனாக எண்ணுக. பகையாகக் கருதேல். விளக்கு உண்மைப் பொருளைக் காண்பிக்கும். பிறர்க்கு உணர்த்த வேண்டிய உனக்கு யான் உணர்த்த வேண்டுமா என்பது குறிப்பு. நெல்லி அங்கனி - அம் சாரியை. ஐயுறல், நினையல் - எதிர்மறை ஏவல் வினைமுற்று. (25) |