அறுசீர்விருத்தம் 5253. | என்று அவன்இறைஞ்ச நோக்கி, இரக்கமும் முனிவும் எய்தி, 'நின்றவன்நிருதன் அல்லன்; நெறி நின்று, பொறிகள் ஐந்தும் வென்றவன்;அல்லனாகில், விண்ணவன் ஆக வேண்டும்; நன்று உணர்வுஉரையன்; தூயன்; நவை இலன் போலும்!' என்னா, |
என்று அவன்இறைஞ்ச - என்று கூறி அனுமன்வணங்கி நிற்க; நோக்கி - அவனைப் பார்த்து (பிராட்டி); இரக்கமும் முனிவும் எய்தி - இரக்கத்தையும் கோபத்தையும் ஒருங்கே அடைந்து; நின்றவன் - எதிரே நிற்கும் இவன்; நிருதன் அல்லன் - அரக்கன் அல்லன்; நெறி நின்று - நல்ல ஒழுக்கத்திலே நிலைத்திருந்து; பொறிகள் ஐந்தும் - ஐந்து பொறிகளையும்; வென்றவன் - வென்றமுனிவன் ஆவான்; அல்லன் ஆகில் - முனிவன் அல்லன் என்றால்; விண்ணவன் ஆதல் வேண்டும் - தேவனாக இருக்க வேண்டும்; உணர்வு நன்று உரையன் - அறிவு நன்றாக உள்ள பேச்சினன்; தூயன் - தூய்மையானவன்; நவை இலன் போலும் - குற்றம் அற்றவன் போலும்; என்னா - என்று அறிந்து. பிராட்டிக்குமுதலில் இரக்கமும் முனிவும் வந்தன. ஆனால் முனிவு மறைந்து விட்டது. இங்ஙனம் தோன்றி மறையும் உணர்வுகள் பல. முனிவு என்பதற்கு வருத்தம் என்னும் பொருள் கொள்ளலாம். முனிவு இகந்திருந்த முதுவாயிரவல' என்னும் (சிறுபாண் 40) பகுதியைப் பார்க்கவும். முனிவு, வருத்தம் என்று பேசப்பட்டது. பிராட்டி, அனுமனைப் புலன்கள்வென்றவன் என்றும் தேவன் என்றும் பேசியது அனுமனின் பெருமைக்குச் சிறந்த சான்று. அனுமன் சிறப்பை இராமன் பேசியதை இங்கே கருதுக. அவன் அனுமனின் விசுவருபம் கண்டபின் புகழ்ந்தான். பிராட்டியோ இயல்பான நிலையில் அனுமனை அறிந்து புகழ்ந்தாள். இராமன் 'மறைகளாலும், ஞானத்தாலும் கோட்படாப்பதம்' (கம்ப. 3783.) என்றான். விண்ணவன் என்றாள் பிராட்டி, விண்ணவன் என்பது தேவன் என்னும் இயல்பான பொருளும், விண் போன்று ஞானத்தால் அறியமுடியாத நுட்பமானவன் என்னும் ஆழ்ந்த பொருளும் கொண்டுள்ளது. பெருமான், அனுமனின் சொல்லைச் சிறப்பித்து விரிவாகப் பேசினான். இங்கே பிராட்டி'உரையும் தூயன்' என்றாள். பெருமான் அனுமனை, நவைபடா ஞானத்தாலும் அறியப்படாதவன் என்றான் - பிராட்டி 'நவை இலன்' என்று பேசினாள். நெறி - ஒழுக்கம். பொறிகளை வெல்ல நெறியில் நிற்றல் வேண்டும். பொறிகளை வென்றவன் தேவன் என்பது குறிப்பு. போலும் என்பது அசை. இச்சொல் உறுதிப்படுத்தவியலாத இலேசான ஐயத்தையும் உணர்த்தும். வந்தாய் போல வாராதாய் என்னும் தொடர் கொண்டு அறிக. இதுவும் அடுத்த பாடல்களும் குளகம் (26-27-28) (26) |