5255. | எனநினைத்து, எய்த நோக்கி, 'இரங்கும் என் உள்ளம்; கள்ளம் மனன் அகத்துஉடையர் ஆய வஞ்சகர் மாற்றம் அல்லன்; நினைவுடைச்சொற்கள் கண்ணீர் நிலம் புக, புலம்பா நின்றான்; வினவுதற்கு உரியன்' என்னா, 'வீர ! நீ யாவன் ?' என்றாள். |
எனநினைந்து -என்றுகருதி; (அனுமனை) எய்த நோக்கி - செவ்வையாக நோக்கி (இவனால்); என் உள்ளம் இரங்கும் - என் மனம் இவனால் உருகும்; (இவன்) மனன் அகத்து - உள்ளத்தின் கண்ணே; கள்ளம் உடையர் ஆய - கபடத்தைப் பெற்றிருப்பவரான; வஞ்சகர் மாற்றம் அல்லன் - வஞ்சகர்களின் சொற்களை உடையவன் அல்லன்; கண்ணீர் நிலம்புக - கண்ணீரானது பூமியில் விழ; நினைவு உடைச் சொற்கள் - வருத்தத்தால் வந்த சொற்களை; புலம்பா நின்றான் - அழுகையுடன் பேசுகின்றான்; (ஆகையாலே) (இவன்) வினவுதற்கு உரியன் - பேசுவதற்குத் தகுதியுடையவன்; என்னா - என்று ஆராய்ந்தறிந்து (பிராட்டி); வீர - வீரனே; நீ யாவன் - நீ எவன்; என்றாள் - என்று வினவினாள். இவன் தோற்றம்என்னை உருக்கிற்று. இவன் பேச்சு வஞ்சகமின்மையை உணர்த்திற்று. இவன் புலம்புதல் இவன் தூய்மையைக் காட்டிற்று.ஆதலின் இவன் வினவுதற்கு உரியன் என்று பிராட்டி முடிவு கட்டினாள். தக்காரைக் காணும்போது மனம் உருகுதல் இயற்கை. அனுமன் இராமனைக் கண்டு உருகியதை நினைக்க. என்பு எனக்கு உருகுகின்றது என்று அவன் பேசினான். நினைவு - வருத்தம். 'நினைவின் அகன்றான்' என்னும் சிந்தாமணிக்கு (339) இனியர் வருத்தத்தின் நின்றும் நீங்கினான் என்று விளக்கினார். நினைவு - ஆலோசனை. அனுமன் ஆலோசித்துப் பேசினான் என்று பிராட்டி கருதியதாகவும் கொள்ளலாம். அனுமன் பேச்சு தற்கொலை கூடாது என்பதை நி்ரூபிக்கும் சொல்லாகவே உள்ளது. புலன்கள் வெல்வது வீரம் என்பது இந்தியத் தொல் மரபு ஆதலின் அனுமனை வீர என்று விளித்தாள். (28) |