5261.

'புன் தொழில் அரக்கன் கொண்டு போந்த நாள்,
                   பொதிந்து தூசில்
குன்றின் எம்மருங்கின் இட்ட அணிகலக்
                    குறியினாலே,
வென்றியான்அடியேன்தன்னை வேறு கொண்டு
                    இருந்து கூறி,
"தென் திசைச்சேறி" என்றான்; அவன் அருள்
                    சிதைவது ஆமோ ?

     புன்தொழில்அரக்கன் - அற்பத் தொழில்புரியும் இராவணன்;
கொண்டு போந்த நாள் -
உன்னைக் கவர்ந்து சென்ற காலத்தில்;
எம்குன்றின் மருங்கில் -
எம்முடைய மலையின் பக்கத்தில்; தூசில்
பொதிந்து -
ஆடையில் முடிந்து வைத்து; இட்ட - உன்னால் எறியப்பட்ட;
அணிகலக் குறியினாலே -
ஆபரணங்களின் அடையாளத்தால்; வென்றியான்- வெற்றியே வடிவமான இராமபிரான்; அடியேன்  தன்னை -
அடியவனானஎன்னை; வேறு இருந்து கொண்டு - தனியாக அமர்ந்து
கொண்டு; கூறி -சில அடையாளங்களைச் சொல்லி (என்னை); தென்திசை
சேறி என்றான் -
நீதெற்குத் திசைக்குப்போ என்று கூறினான்; அவன்
அருள் சிதைவதாமோ -
அவனுடைய அருள் பழுதுபடுமா.

     பொதிந்து இட்டஅணிகலம் என்க. இராமன் தென்திசை செல்க
என்றான். அதனால் உன்னைக் கண்டேன். இதற்கு காரணம் அவன் அருள்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கும் பேறு கிட்டிற்று. செல்+தி-சேறி.
முதல் நிலை திரிந்த தொழிற்பெயர். பிராட்டி அணிகளைப்பொதிந்து இட்டது,
கலங்காண்படலத்தில் 'இழை பொதிந்து இட்டனள்' (கம்ப. 3903) என்று
கூறப்பெற்றது. 'சீதையை.... அரக்கன் வவ்விய ஞான்றை, நிலம் சேர் மதரணி
கண்ட குரங்கின்' என்று புறப்பாட்டு விளம்பிற்று (புறம் 378) பிராட்டி
தென்திசையில் உள்ளாள் என்பதை அணிகலன் காண்பித்தது. புன்மை
புரிதலைத் தொழிலாகப் பெற்றவன் இராவணன் என்க. 'யான் இழைத்திட இல்
இழந்து இன்னுயிர் சுமக்கும் மானுடன்' (கம்ப. 6179) என்று அவன் பேசியதை
உலகம் அறியும்.                                         (34)