5264.

எய்து அவன்உரைத்தலோடும், எழுந்து, பேர்
                            உவகை ஏற,
வெய்து உறஒடுங்கும் மேனி வான் உற விம்மி
                            ஓங்க,
'உய்தல் வந்துஉற்றதோ ?' என்று அருவி நீர் ஒழுகு
                            கண்ணாள்,
'ஐய ! சொல், ஐயன் மேனி எப்படிக்கு அறிதி ?'
                            என்றாள்.

     அருவி - அருவியைப் போல;நீர் ஒழுகும் கண்ணாள் - கண்ணீர்
சிந்தும் கண்களையுடைய பிராட்டி; எய்து அவன் - தூதனாக வந்த அனுமன்;
உரைத்த லோடும் - (பெருமான் அன்பை) உரைத்தவுடன்; எழுந்த -
தோன்றிய; பேர் உவகை ஏற - பெருமகிழ்ச்சி கரைகடக்கவும்; வெய்து உற
-
துன்பம் அதிகரித்ததால்; ஒடுங்கும் மேனி - இளைத்த திருமேனி; வானுற -நன்றாக; விம்மி ஓங்க - பூரித்துச் சிறப்பு அடையவும்; உய்தல் வந்து
உற்றதோ -
தப்பிப் பிழைத்தல் என்பால் வந்துவிட்டதோ; என்று - என்று
கூறி (அனுமனை நோக்கி); ஐயன் மேனி - இராமபிரானின் திருமேனி;
எப்படிக்கு - எந்தவிதமாக; அறிதி - அறிந்துள்ளாய்; சொல் என்றாள் -
கூறுக என்றாள்.

     உள்ளத்தில்உவகை மிகுந்ததால் உடல் பூரித்தது. துன்பத்தால் ஒடுங்கிய
மேனி விம்மி வீங்கிற்று. 'மென்மருங்குல் போல் வேறுள அங்கமும்
மெலிந்தாள்' என்று முன்பு பேசப்பெற்றது. 'மெலிவு அகல ஓங்கினாள்' என்றும்
'உடல் தடித்தாள் வேறு ஒருத்தி ஒக்கின்றாள்'
என்றும்  பேசப்பெறும்(கம்ப.
5071, 7719, 7720.) வான் உற - நன்றாக. 'வயவர் தந்த வான்கேழ்நிதியம்'
(சிறுபாண் 249) பிராட்டி மகிழ்ச்சியால் கண்ணீர் சிந்தினாள். அழுத கண்ணீர்
கால் அலைந்து ஒழுகிற்று, என்னும் சிந்தாமணிக்கு இனியர் 'உவகைக் கலுழ்ச்சி'
என்றார். இதுவும் அது. இதனை நல்லார் 'உவகைக் கண்ணீர்' என்பர் (சிலம்பு
5.237-239) உற்றதோ என்பதில் உள்ள ஓகாரம் ஐயத்தின் முடிவில் தோன்றும்
நம்பிக்கையை உணர்த்துவது படி - தன்மை, படித்து - தன்மை உடையது. படி
- உவமம் என்று கூறலாம். (37)