| 5265. | 'படி எடுத்துஉரைத்துக் காட்டும் படித்து அன்று, படிவம்; பண்பின் முடிவு உள உவமம்எல்லாம் இலக்கணம் ஒழியும், முன்னர்; துடிஇடை !அடையாளத்தின் தொடர்வையே தொடர்தி' என்னா, அடி முதல்முடியின்காறும், அறிவுற அனுமன் சொல்வான். |
துடி இடை ! -உடுக்குப்போலும் இடையுடையவளே; படிவம் - இராமபிரானின் திருமேனி; படி உரைத்து - உவமானத்தைக் கூறி; எடுத்துக்காட்டும் - (பொதுத்தன்மையை) விளக்கிக்கூறும் (அளவுக்கு); படித்து அன்று - (எளிய) இயல்புடையதன்று; உவமம் எல்லாம் - எல்லா உவமைக்கும்; பண்பின் - பொதுத்தன்மையாகிய பண்பில்; முடிவு உள - எல்லைகள் உள்ளன; முன்னர் இலக்கணம் ஒழியும் - முற்பட்டு இலக்கணத்தால் நிரம்பாது நீங்கும்; (உவமையை நோக்காமல்) அடையாளத்தின் - யான்கூறும் அடையாளங்களின்; தொடர்வையே - தொடர்ச்சியையே; தொடர்தி - பின்பற்றி உணர்க; என்னா - என்று; அடிமுதல் - திருவடிமுதல்; முடியின்காறும் - திருமுடி முடிய; அறிவுற - அறிந்து கொள்ளும்படி; அனுமன் சொல்வான் - அனுமன் கூறத் தொடங்கினான். பத்துமதியிருந்தால்தான் விரல் நகத்துக்கு ஒப்பாம் என்றான். மதி ஒன்றே; விரல் நகம் பத்து. இங்ஙனம் உவமை அளவுபடுதலைப் பேசினான். இதுவே உவமைக்கெல்லாம் முடிவுள என்று கூறப் பெற்றது. பிறவும் இப்படியே கருதுக. பெருமான் அழகு என்னால் சொல்லப்படாது. சொன்னது கொண்டு தேவரீர் அறிந்தபடி அளவிட்டுக் கொள்ளும் என்பது பழையவுரை (அடை - பதி) (38) |