கலி விருத்தம் | 5266. | ' "சேயிதழ்த் தாமரை" என்று, சேண் உளோர் ஏயினர்; அதன்துணை எளியது இல்லையால், நாயகன் திருஅடிகுறித்து நாட்டுறின்; பாய் திரைப்பவளமும் குவளைப் பண்பிற்றால் ! |
(ஐயன் திருவடி) சேயிதழ் தாமரைஎன்று -சிவந்த இதழ்களைப் பெற்ற தாமரை மலர் என்று; சேண் உளோர் - தூரத்திலிருப்பவர் (திருவடியைப் பாராதவர்); ஏயினர் - ஒப்பிட்டுப் பேசினர்; அதன் துணை - அத்தாமரை அளவுக்கு; எளியது இல்லை - எளிமை உடையது அன்று; நாயகன் - இராமபிரான்; திருவடி குறித்து - திருவடியை எண்ணி (அதற்கேற்ப); நாட்டுறின் - உவமையைக் கூறத் தொடங்கினால்; பாய்திரை - பரவிய அலையுடன் கூடிய கடலில் உள்ள; பவளமும் - பவளம் கூட; குவளைப் பண்பிற்றாம் - குவளையின் பண்பை உடையதாம். சேண் உளோர் -தூரத்திலிருப்பவர் (பாதத்தைப் பாராதவர்) தனித்திருக்கும்போது சிவந்துள்ள பவளம் இராமபிரான் திருவடி அணுகும்போது குவளைபோல் கரியநிறம் பெறும். குவளைப் பண்பினாம் - எனப்பாடங்கொண்டு தாமரையைத் திருவடிக்கு உவமையாக்குவது பவளத்திற்குக் குவளையை உவமை கூறியதற்கு ஒப்பாம் என்று பொருள். பாதாதி கேசவர்ணனை மேற்கொள்ளப்பட்டது. இராமன் பரம் பொருள் என்பது குறிப்பு. (39) |