5268.

'சிறியவும் பெரியவும் ஆகி, திங்களோ,
மறு இல பத்துஉளஅல்ல; மற்று இனி;
எறி சுடர்வயிரமோ திரட்சி எய்தில;
அறிகிலென்,உகிர்க்கு, யான், உவமம் ஆவன.

     உகிர்க்கு -எம்பெருமான் விரல் நகத்துக்கு; திங்கள் - சந்திரன்;
சிறியவும் பெரியவும் ஆகி - சிறிய வடிவத்தையும் பெரிய வடிவத்தையும்
உடையதாய்; மறுவில - களங்கமில்லாதவையாய்; பத்து உள வல்ல - பத்து
இல்லை; சுடர் எறி - ஒளியை வீசும்; வயிரம் - வயிரங்கள்; திரட்சிஎய்தில
-
உருட்சியைப் பெறவில்லை; (ஆதலால்) யான் இனி - யான் மேலும்;
உவமம் ஆவன - உவமமாகப் பொருந்தக் கூடியனவற்றைச்; அறிகிலேன் -
சிந்திக்கும் ஆற்றல் உடையேன் அல்லன்.

     சந்திரன்,சிறிய வடிவத்தையும், பெரியவடிவத்தையும் பெற்றதாய்ப் பத்து
இல்லை. வயிரங்கள் திரட்சியைப் பெறவில்லை. பலவாக இல்லாததால்
திங்களும் திரட்சி எய்தாமையால் வயிரமும் உவமையாகும் பேற்றை இழந்தன.
உவமம் - ஒப்பு. மற்று - அசை. திங்களோ வயிரமோ - 'ஓ' அசை நிலை.
திருவே கொலோ (சிந்தா 639) என்பதில் உள்ள ஓகாரம் அசை என்றார்,
இனியர். அறிகிலேன் இதில் உள்ள இல் ஆற்றல் உணர்த்தும் இடைச்சொல்
ஆழ்வார் ஐம்புலன் வெல்லகில்லேன் என்றார் (திருவாய் 4-7-9)       (41)