5273. | 'பொரு அரு மரகதப் பொலன் கொள் மால் வரை வெருவுற விரிந்துஉயர் விலங்கல் ஆகத்தைப் பிரிவு அறநோற்றனள் என்னின், பின்னை, அத் திருவினின் திருஉளார் யாவர் ? தெய்வமே ! |
தெய்வமே ! -பிராட்டியே; பொருவு அரு - ஒப்பற்ற; பொலன் கொள் - அழகைக் கொண்ட; மரகதமால் வரை - மரகத மலையானது; வெருவற - அஞ்சும்படி; விரிந்து உயர் - பரந்து உயர்ந்துள்ள; விலங்கல் ஆகத்தை - மலைபோன்ற திருமார்பை; பிரிவு அற - பிரிதல் இல்லாமல் (அங்கே வாழ); நோற்றனள் என்னில் - திருமகள் தவம் செய்தாள் என்றால்; அத்திருவினில் - அந்தத் திருமகளைவிட; பின்னை யாவர் திருவுளார் - பிறகு எவர் பேறு பெற்றவர். பின்னை,விலங்கல் ஆகத்தைப் பிரிவு அற நோற்றனள் என்னின் திருவினும் யாவர் திருவுளார் எனமுடிக்க. பின்னை என்றற்கு பிறகு என்றே பொருள் கூறப்பெற்றது. பின்னை - திருமகள். பின்னை மணாளனை பேரிற் கிடந்தாளை (பெரியாழ்வார் 2-5-1) இது கிருஷ்ணாவதாரத்துக்குப் பிற்பட்ட வழக்கு - இராமாவதாரத்தில் அனுமன் கூற்றில் பொருந்தாது. பிராட்டியைத் தெய்வம் என்றான். சீதை என்பதோர்தெய்வம். என்பர் திருமங்கை மன்னர் (பெரிய திருவடி 10-2-5) (46) |