5274.

'நீடுறு கீழ்த் திசை நின்ற யானையின்
கோடு உறுகரம்என, சிறிது கூறலாம்,
தோடு உறு மலர்எனச் சுரும்பு சுற்று அறாத்
தாள் தொடு தடக்கை; வேறு உவமை சாலுமே ?

     தோடு உறு -இதழ்கள்பொருந்திய;  மலர்என - தாமரைப் பூ என்று
கருதி; சுரும்பு சுற்று அறா - வண்டுகள் மொய்ப்பது நீங்காத; தாள்தொடு
தடக்கை -
முழந்தாளைத் தீண்டும் கரங்கள்; கீழ் திசை நின்ற - கிழக்குத்
திசையில் இருக்கும்;
யானையின் - ஐராவதம் என்னும்யானையின்; கோடு
உறு -
தந்தங்களின்நடுவில் இருப்பதும்; நீடு உறு - நீண்டிருப்பதும் ஆன;
கரம் என - துதிக்கைஎன்று; சிறிது கூறலாம் - ஒருபுடை பேசலாம்; வேறு
உவமை -
பிறஉவமைகள்; சாலுமே - போதுமானதாயிருக்குமோ.

     யானையின் கரமேஒரு புடை ஒப்புமை எனின் மற்றவை முற்று
உவமையாகுமோ கீழ்த்திசை - கீட்டிசை - ழகரம் டகரம் ஆயிற்று. பழைய
வழக்கு. திகடரு சடைமுடி (சம்பந்தர் 344 - 10) வீரசோழிய வழக்கன்று.
சாலுமே - ஏகாரம் ஐயப்பொருள்தந்தது. ஒருபுடை ஒப்புமை என்பர். அது
இங்கு சிறிது என்று பேசப்பெற்றது. கிழக்குத் திசை யானை - ஐராவதம்.
முழங்கால் அளவு கை நீண்டிருத்தல் உத்தம இலக்கணம். தாள் தோய்
தடக்கைத் ததை மாண் வழுதி (புறம் 59) இதனை வடநூல் ஆஜாநு பாஹீ
என்று பேசும். கோடுறு கரம் என்பதற்கு, வளைந்த கரம் என்றும் வரைகள்
பொருந்திய கரம் என்றும் கூறலாம். கோள்துறு எனப்பிரித்து வலிமை மிக்க
கரம் என்று உரை கூறியவரும் உளர். வரைகள் பெற்றிருத்தல்,
வளைந்திருத்தல் கொம்புகள் இடையே இருத்தல் உவமானக் குறைபாடு,
ஆதலின் சிறிது கூறலாம் என்றான்.                           (47)