5275.

'பச்சிலைத் தாமரை பகல் கண்டால் எனக்
கைச் செறிமுகிழ் உகிர், கனகன் என்பவன்
வச்சிரயாக்கையை வகிர்த்த வன் தொழில்
நிச்சயம்; அன்றுஎனின், ஐயம் நீக்குமே.

     பச்சிலைத்தாமரை - பசிய இலைகளுடன் கூடிய தாமரை மலரை;
பகல் கண்டால் என - சூரியனைப் பார்த்தாற் போல (மலர்ந்துள்ள); கை -
(பெருமானின்) கைகள்; கனகன் என்பவன் -
 இரணியன் என்று சிறப்பிக்கப்
படுபவன்; வச்சிர யாக்கையை - வச்சிரம் போன்ற உடலை; வகிர்ந்த -
பிளந்தன; வன்தொழில் - அந்தக் கொடுந்தொழில்; நிச்சயம் - உறுதியாக
நிகழ்ந்தது; அன்று எனின் - அச்செயல் உண்மையல்ல என்றால்; ஐயம் -
அந்த ஐயப்பாட்டை; கைச்செறி - கையின்கண் செறிந்துள்ள; முகிழ் உகிர் -
அரும்பு போன்ற நகம்; நீக்கும் - போக்கும்.

     அமைதியானநிலையில் உள்ள பெருமானை நோக்குபவர்களுக்கு
'இவனா மார்பைப் பிளந்தான்' என்று ஐயம் தோன்றும் அந்த ஐயத்தை விரல்
நகம் போக்கும் என்க. சாந்தவடிவமான திருமாலை நோக்கும் போது
ஆழ்வாருக்கே இவன் வயிரமார்பைப் பிளப்பானா என்னும் ஐயம் தோன்றிற்று.
அவர், இவையா பிலவாய் திறந்து எரிகான்ற, இவையா எரிவட்டக் கண்கள்,
என்று ஐயுற்றார். (நான்முகம் 21) ஐயத்தைக் 'கூருகிர் நீக்கும்' என்று
குறித்தனர் கம்பநாடர். பாசுர விதை கற்பனைக்கு இடம் தந்தது. விரல்
கூர்மையும் செந்நிறமும் பெற்றுள்ளது. ஆதலால் ஐயம் வேண்டாஎன்பது
தற்குறிப் பேற்றம். நரசிம்மமே இராமன் என்பது குறிப்பு.            (48)