5276.

'திரண்டில;ஒளி இல; திருவின் சேர்வு இல;
முரண் தரு மேருவில் முரிய மூரி நாண்
புரண்டில; புகழ் இல; பொருப்பு என்று ஒன்று
                               போன்று
இரண்டு இல;புயங்களுக்கு உவமம் ஏற்குமோ ?*

(தோள் மலைகள்போன்றது எனின்)

     பொருப்பு -மலைகள்;திரண்டில - திரட்சியைப் பெறவில்லை; ஒளி
இல -
ஒளியைப் பெறவில்லை; திருவின் சேர்வு இல - திருமகளின் சார்பு
இல்லை; முரண்தரு - வலிமைமிக்க; மேருவில் முரிய - மேருவாகிய வில்
இற்றுப் போக; மூரி நாண் புரண்டில - வலியநாண் புரளப் பெறவில்லை;
புகழ்இல - புகழைப் பெறவில்லை; ஒன்று போன்று என்று - ஒன்று
ஒன்றைப் போல; இரண்டில - இரண்டு கிடையாது; (ஆதலின் மலைகள்)
புயங்களுக்கு - இராமபிரானின் தோள்களுக்கு; உவமை - ஒப்புமை;
ஏற்குமோ - பொருந்துமோ ?

     பொருப்பு, இல்,புயங்களுக்கு உவமை ஏற்குமோ' என்று முடிக்க.
பொருப்பு - எழுவாய்.                                         (49)