5281. | 'எள்ளா நிலத்து இந்திரநீலத்து எழுந்தகொழுந்தும் மரகதத்தின் விள்ளா முழுமா நிழற் பிழம்பும் வேண்டவேண்டும் மேனியதோ ? தள்ளா ஓதிகோபத்தைக் கௌவ வந்துசார்ந்ததுவும் கொள்ளா,வள்ளல் திரு மூக்கிற்கு; உவமைபின்னும் குணிப்பு ஆமோ ? |
(பெருமான் மூக்கைப்போன்று) எள்ளாநிலத்து - இகழ்ச்சியில்லாத பூமியில் தோன்றிய; இந்திர நீலத்து - இந்திர நீலக்கல்லில்; எழுந்த கொழுந்தும் - தோன்றிய முனையும்; மரகதத்தின் - மரகதமணியின்; விள்ளா - பிளவுபடாத; முழுமா நிழல் பிழம்பும் - முழுமையான பெரிய ஒளிப்பிழம்பும்; வேண்ட - (அன்பர்கள்) விரும்ப (அன்பர்களை); வேண்டும் - விரும்புகின்ற; மேனியதோ - அழகை உடையதோ ? கோபத்தை கௌவ வந்து - இந்திர கோபத்தைப் பற்றவந்து; சார்ந்த - பற்றிய; தள்ளா ஓதி அதுவும் - நீங்காத பச்சோந்தியும்; உவமை கொள்ளா - ஒப்பாதல் பொருந்தாத; வள்ளல் திருமூக்கிற்கு - பெருமானின் மூக்கிற்கு; பின்னும் - பிறபொருளும்; குணிப்புஆமோ - ஒப்புமை கூறுதல் ஏற்குமோ ? கொழுந்தும்பிழம்பும் மேனியதோ - ஒருமை பன்மை மயக்கம். இந்திர நீலம் - பெருமான் திருமேனி. கொழுந்து மூக்கு. மரகதம் - பெருமான் திருமேனி. பிழம்பு - மூக்கு என்க. இந்திர கோபம் - அதரம். பச்சோந்தி மூக்கு. மூக்கு, கொழுந்தும் பிழம்பும் உவமையாகப் பிறர் கூற அதை விரும்பும் மேனியுடையதோ என்றும் கூறலாம். உரிய பொருள் காணல் அறிஞர் கடன். மூக்கிற்கு, இந்திர கோபத்தைக் கவ்விய ஓந்தியே ஒப்பாகாத போது பிறவற்றைக் கூறுதல் ஒவ்வா என்க. கோபம் - தம்பலப்பூச்சி (பட்டுப்பூச்சி), மூதாய் என்பது சங்க வழக்கு, ஓதி - பச்சோந்தி. மேனி - அழகு. (54) |