| 5283. | 'வரு நாள் தோன்றும் தனி மறுவும், வளர்வும் தேய்வும், வாள் அரவம் ஒரு நாள் கவ்வும் உறு கோளும், இறப்பும், பிறப்பும் ஒழிவுற்றால், இரு-நால் பகலின் இலங்கு மதி, அலங்கல் இருளின் எழில் நிழற் கீழ்ப் பெரு நாள் நிற்பின், அவன் நெற்றிப் பெற்றித்து ஆகப் பெறும் மன்னோ ! |
இரு நால் பகலின்- எட்டாவது நாளில்; இலங்கும் மதி - விளங்கும் மதியானது; வருநாள் தோன்றும் - வளர்ந்து வரும் நாட்களில் வெளிப்படையாகத் தெரியும்; தனி மறுவும் - தனியாகவுள்ள களங்கமும்; வளர்வும் தேய்வும் - வளர்தலும் தேய்தலும்; வாள் அரவம் - கொடிய பாம்பால்; ஒருநாள் கவ்வும் - ஒரு நாள் கவ்வப்படும்; உறுகோளும் - மிக்க துன்பமும்; இறப்பும் பிறப்பும் - அழிதலும் தோன்றுதலும்; ஒழிவுற்றால் - நீங்கப் பெற்றால்; அலங்கல் இருளின் - அசைகின்ற இருளின்; எழில் நிழற் கீ்ழ் - அழகிய நிழலுக்குக் கீழே; பெருநாள் நிற்பின் - நீண்ட நாட்கள் நின்றால் (அது); அவன் - இராமபிரானுடைய; நெற்றிப் பெற்றித்து ஆக பெறும் - நெற்றியின் தன்மை உடையதாகக் கருதப்பெறும். மதி,ஒழிவுற்றால், நிற்பின், பெற்றித்து, ஆகப் பெறும் என்று கூட்டுக. அசையும் இருள் என்றது பெருமானின் நெற்றியின்பால் அசையும் அளகத்தை. அளகம் - முன் நெற்றி மயிர். இருள் உவம ஆகுபெயராய் இருள் போன்ற தலை உரோமத் தொகுதியை உணர்த்திற்று. இருண்ட குழற்கற்றையின் கீழ் விளங்கும் பெருமான் நெற்றிக்கு இருளின் கீ்ழ் ஒளிரும் பிறை ஒன்று இருக்குமாயின் ஒப்பாகும் என்றவாறு (அண்ணாமலை பதிப்பு) (56) |