நீண்டு குழன்று -நீளமாகியும் குழைந்தும்; நெய்த்து இருண்டு - பளபளத்தும் கருத்தும்; நெறிந்து செறிந்து - நெளிந்தும் அடர்ந்தும்; நெடுநீலம் பூண்டு - நீலநிறத்தைப் பெற்றும்; புரிந்து சரிந்து - அசைந்தும் தாழ்ந்தும்; கடை சுருண்டு - இறுதிப் பகுதி சுருண்டும்; புகையும் நறும் பூவும் - வாசனைப் புகையும் மண மலரும்; வேண்டும் அல்ல என - வேண்டுவன இல்லை என்று; தெய்வ வெறியே கமழும் - தெய்வ மணம் கமழ்கின்ற; நறுங்குஞ்சி - நல்ல குழல்; ஈண்டு - இந்தக் கானகத்தில்; சடையாயினது என்றால் - சடையாகிவிட்டது என்பதால்; (அதன் எளிமை கருதி) மழை என்று உரைத்தல் -அதனைமேகம் என்று கூறுவது; இழிவு அன்றோ - தாழ்வு அல்லவா.
நறுங்குஞ்சிசடையாயினது என்றால் மழை என்று கூறுவது இழிவு எனச் சேர்க்க. இராமபிரான் நறுங்குஞ்சி கருநீலம் என்பதை உணர்த்த 'இருண்டு நெடுநீலம் பூண்டு' என்று கூறப் பெற்றது. 'பட்டுக் கருநீலம்' என்று கவிச்சக்கரவர்த்தி பாரதி பாடுவார் (கண்ணம்மா - காதலி) குலசேகரர் 'நறுங்குஞ்சி புன்சடையா' என்று பாசுரம் இட்டார் (தசரதன் புலம்பல்) அதற்கு விளக்கம் இப்பாடல். 'அரிவை கூந்தலின் நறியவும் உளவோ' என்று குறுந்தொகை பேசும். (குறுந் 2) அதை ஒட்டி மகளிர் குழல் போலவே ஆடவர் குழலுக்கும் நறுமணம் உண்டு என உணர்க. ஈண்டு என்றது கானகத்தை. ஈண்டு - இவ்விடம். அன்றி ஈண்டு என்பதைச் சடைக்கு அடைமொழியாக்கி, அடர்ந்த சடை என்றும் கூறலாம். (57)