5285. | 'புல்லல்ஏற்ற திருமகளும், பூவும்,பொருந்தப் புவி ஏழும் எல்லை ஏற்றநெடுஞ் செல்வம் எதிர்ந்தஞான்றும், அஃது இன்றி அல்லல் ஏற்றகானகத்தும், அழியாநடையை, இழிவான மல்லல் ஏற்றின்உளது என்றால், மத்த யானைவருந்தாதோ ?' |
புல்லல் ஏற்றதிருமகளும் - தழுவுதலை மேற்கொண்ட திருமடந்தையும்; பூவும் - நிலமடந்தையும்; பொருந்த - தன்பக்கல் தங்க (அதனால்); புவி ஏழின் - ஏழு உலகங்களின்; எல்லை ஏற்ற - எல்லையை ஏற்றுக் கொண்ட; நெடும் செல்வம் - நீட்சி மிக்க செல்வமானது; எதிர்ந்த ஞான்றும் - எதிர்ப்பட்ட காலத்திலும்; அஃது இன்றி - அச்செல்வம் இல்லாமல்; அல்லல் ஏற்ற - துன்பம் மிக்குயர்ந்த; கானகத்தும் - காட்டின் கண்ணேயும்; அழியா நடையை - தளர்ச்சியடையாத நடையை; இழிவான மல்லல் - தாழ்வுற்ற வளத்தைப் பெற்ற; ஏற்றின் உளது - காளையின்பால் உள்ளது; என்றால் - என்று கூறினால்; மத்த யானை - மதம் மிக்க யானையானது; வருந்தாதோ - வருத்தம் அடையாதோ. காளையின்பால் இராமபிரான் நடை உள்ளது என்று கூறின் யானை வருந்தும் என்று கூறிப் புதிய அணிக்கு வழிவகுத்த கவிச்சக்கரவர்த்தி புலமையை வழிபடுக. கானகத்தும் - என்பதில் உள்ள உம் - அசை.'காமக்கடல் மன்னும் உண்டோ' (குறள் 1164) அழகர் மன்னும் உம்மும் அசை நிலை என்றார்.காலத்தும் என்னும் பாடம் கானத்தும் என்று பாடபேதம்ஆயிற்று போலும். நடையை என்பதில் உள்ள ஐ அசை - உருபு அன்று.நடைஉளது, என்றால் புகழானை.......... விளக்கினான் (சிந்தா 2605) (58) |