அனுமன் கூறியஅடையாளவுரைகள் சந்தக் கலிவிருத்தம் | 5287. | ' "நடத்தல் அரிது ஆகும் நெறி; நாள்கள் சில; தாயர்க்கு அடுத்த பணிசெய்து இவண் இருத்தி" என, அச் சொற்கு, உடுத்ததுகிலோடும், உயிர் உக்க உடலோடும், எடுத்தமுனிவோடும், அயல் நின்றதும் இசைப்பாய். |
(சீதையே) நெறி - காட்டுவழியில்;நடத்தல் அரிது ஆகும் - நடப்பது உனக்கு இயலாதது ஆகும்; (ஆதலால்) நாள்கள் சில - யான் கானகத்தில் வாழும் நாள்கள் சிலவே (அதுவரை); தாயர்க்கு - என்னுடைய தாய்மார்கட்கு; அடுத்த பணி செய்து - ஏற்ற பணிவிடைகளைச் செய்து கொண்டு; இவண் இருத்தி என - அயோத்தியில் இரு என்று யான் கூற; (உடனே) அச்சொற்கு - அச்சொல்லைக் கேட்ட அளவில்; உடுத்த துகிலோடும் - புனைந்த மரவுரியுடனும்; உயிர் உக்க உடலோடும் - உயிர் கலங்கிய உடலுடனும்; எடுத்த முனிவோடும் - மிக்க கோபத்துடனும்; அயல் நின்றதும் - (பயணத்துக்கு ஆயத்தமாய்) என்பக்கத்தில் நின்றதையும்; இசைப்பாய் - (அனுமானே நீ) பிராட்டியிடம் கூறுக. இராமபிரானின்மொழியை அப்படியே அனுமன் பிராட்டியின் பால் சமர்ப்பிக்கின்றான். நாடவிட்ட படலத்தில் பெருமான் அனுமன்பால் கூறியதை ஒப்பிடுக. (கம்ப. 4516 - 4517) பெருமான் கூறியதை அனுமன் சிறுசிறு மாற்றங்களுடன் கூறிய திறம் பாராட்டற்பாலது. உடுத்த துகிலோடு பிராட்டி வந்தது விரைவையும் ஆவேசத்தையும் காட்டுகிறது. 'அனைய வேலை அகமனை எய்தினள்... சீரம் துணிந்து புனைந்தனள்... வள்ளல் பின் வந்து அயல் நின்றனள். பனையின் நீள்கரம் பற்றிய கையினாள் என்று முன்பு பேசப் பெற்றது (கம்ப. 1829) 'உயிர்உமிழா நின்றாள்' என்றும் (கம்ப. 1825) 'ஊன் இலா உயிரின் வெந்து' என்றும் (கம்ப. 4517) பேசப்பட்டன. இங்கு அவற்றை எல்லாம் அடக்கி, 'உயிர் உக்க உடலோடும்' என்று பேசப்படுகிறது. இவ் விருத்தம் விளங்காய் - விளங்காய் - விளங்காய் - தேமா என்னும் 4 சீர்களை முறையே பெற்று வரும். இப்பாடல் நேரசையில் தொடங்கின 14 எழுத்தையும் நிரையசையில் தொடங்கின் 15 எழுத்தையும் பெற்று வரும். இப்பாடல் 292 முறை காட்சி தருகின்றது. இதனை கம்பன் அடிப்பொடி அவர்கள் 'அளவடி நான்குடைச் சந்தக் கலிவிருத்தம்' என்பர். (மணிமலர் 76) (60) |