5289. | ' "எள் அரிய தேர் தரு சுமந்திரன் ! இசைப்பாய், வள்ளல் மொழிவாசகம்; மனத் துயர் மறந்தாள்; கிள்ளையொடுபூவைகள் வளர்த்தல் கிள" என்னும், பிள்ளை உரையின்திறம் உணர்த்துதி, பெயர்த்தும். |
எள் அரியதேர்தரு சுமந்திரன் - இகழ்ச்சியில்லாததேரோட்டும் சுமந்திரனானவன்; (பிராட்டியை நோக்கி) நீ வள்ளல் மொழி - இராமபிரான் மொழி வழியில்; வாசகம் இசைப்பாய் என - வார்த்தை கூறுக என்று கூற; மனத்துயர் மறந்தாள் - மனத் துன்பம் மறந்த பிராட்டி; கிள்ளையொடு பூவைகள் - கிளிகளையும் நாகணவாய்ப் பறவைகளையும்; வளர்த்தல் - வளர்ப்பதை; கிள என்னும் - (என் சகோதரிகள் பால்) கூறுக என்னும்; பிள்ளை உரையின் திறம் - குழந்தையியல்புள்ள மொழியின் தன்மையை; பெயர்த்தும் - மீளவும்; உணர்த்துதி - (அனுமானே) கூறுக. சுமந்திரன்,மொழி, வாசகம் எனத்துயர் மறந்தாள் வளர்த்தல் கிள என்னும் பிள்ளை மொழியின் திறம் உணர்த்துதி என்று சேர்க்கவும் வள்ளல் மொழி - வள்ளல் பேசிய வழியில்; பொன் நிறப் பூவையும் கிளியும் போற்றுக என்று உன்னுமென் தங்கையர்க்கு உணர்த்துவாய்' என்று முன்பு பேசப்பெற்றது (கம்ப. 1878) (62) |