5293. | வாங்கினள்; முலைக் குவையில் வைத்தனள்; சிரத்தால் தாங்கினள்;மலர்க் கண்மிசை ஒற்றினள்; தடந் தோள் வீங்கினள்;மெலிந்தனள்; குளிர்ந்தனள்; வெதுப்போடு ஏங்கினள்;உயி்ர்த்தனள், இது இன்னது எனல் ஆமே ? |
(பிராட்டிமோதிரத்தை) வாங்கினள் -எடுத்துக்கொண்டாள் (அதை); முலைக் குவையில் வைத்தனள் - தனங்களின் மேலே வைத்துக் கொண்டாள்; சிரத்தால் தாங்கினள் - தலையிலே வைத்துக் கொண்டாள்; மலர்க்கண் மிசை ஒற்றினள் - மலர் போன்ற கண்களில் ஒற்றிக் கொண்டாள்; தடந்தோள் வீ்ங்கினள் - பெரியதோள் பூரித்தாள்; மெலிந்தனள் - இளைத்தாள்; குளிர்ந்தனள் - குளிர்ச்சியடைந்தாள்; வெதுப்போடு ஏங்கினள் - வெப்பத்துடன் ஏக்கமுற்றாள்; உயிர்த்தனள் - பெரு மூச்சு விட்டாள்; இது (பிராட்டியடைந்த) இந்த மெய்ப்பாட்டை; இன்னது எனல் ஆமோ - இன்ன மெய்ப்பாடு என்று கூற முடியுமா. எண்வகைமெய்ப்பாடுகளுள், பிராட்டியின் மெய்ப்பாடு இன்னது என்று கூறவியலுமா. இவள் நிலை இதுதான் என்று வரையறுத்துக் கூறல் இயலாது. (66) |