5303.

'கண்டபின், இளைய வீரன் முகத்தினால் கருத்தை
                                     ஓர்ந்த
புண்டரிகக்கணானும், உற்றது புகலக் கேட்டான்;
வண்டு உறை சாலைவந்தான், நின் திரு வடிவு
                                     காணான்,
உண்டு உயிர்,இருந்தான்; இன்னல் உழப்பதற்கு
                                ஏது ஒன்றோ ?

     கண்டபின் -பார்த்தபிறகு; இளைய வீரன் முகத்தினால் -
இலக்குவனின் முகக்குறிப்பால்; கருத்தை ஓர்ந்த - அவன் மனக் கருத்தை
அறிந்த; புண்டரீகக் கணானும் - தாமரை மலர் போன்ற கண்களை உடைய
இராமபிரானும் (இலக்குவன்); உற்றது புகல - நிகழ்ந்ததை எடுத்துக்கூற;
கேட்டான் - கேட்டு அறிந்து; வண்டு உறை சாலை வந்தான் - வண்டுகள்
மொய்த்துள்ள பர்ண
 சாலையை அடைந்து; நின் திரு வடிவு காணான் -
உன்னுடைய அழகிய வடிவத்தைக் காணாமல்; உயிர் உண்டு -
பெருமூச்சையே உணவாகக் கொண்டு; இருந்தான் - உயிருடன் இருந்தனன்
(அவன்); இன்னல் உழப்பதற்கு - துன்பத்தை அனுபவிப்பதற்கு; ஏது
ஒன்றோ -
காரணம் இது ஒன்று தானா ?

     வண் துறை சாலை,என்று பிரித்து வளமான நீர்த்துறையை அடுத்த
சாலை என்றும் பொருள் கூறலாம். உண்டு உயிர் இருந்தான் என்பதற்கு
உயிருள்ளது என்னும் நிலையில் மட்டும் இருந்தவன் ஆனான் என்று
கூறப்பெற்றது. புண்டரீகம். இச்சொல் வெண்டாமரை என்னும் பொருளில்
வழங்குவது பெரும்பான்மை. ஆயினும் செந்தாமரை என்னும் பொருளில்
இங்கே எடுத்தாளப்பட்டுள்ளது. புண்டரீகாட்சன் என்பது விஷ்ணு சஹஸ்ர
நாமத்தில் 112வது திருநாமம் (தக்க-பரணி 22 குறிப்புரை 262 பக்கம்) (76)