5307.

'சீறி, "இவ் உலகம் மூன்றும் தீந்து உக, சின வாய்
                                   அம்பால்
நூறுவென்" என்று,கை வில் நோக்கியகாலை,
                                   நோக்கி,
"ஊறு ஒருசிறியோன் செய்ய, முனிதியோ உலகை ?
                                   உள்ளம்
ஆறுதி" என்று,தாதை ஆற்றலின் சீற்றம் ஆறி.

     சீறி - சீற்றம் கொண்டு;இ - இந்த; உலகம் மூன்றும் - மூன்று
உலகமும்; தீந்து உக - எரிந்து சாம்பலாய்ச் சிதற; சினவாய் அம்பால் -
கோபத்தையும் தப்பாமையும் உடைய அம்பினாலே; நுறுவென் என்று -
அழிப்பேன் என்று கூறி; (தன்னுடைய) கைவில் நோக்கிய காலை - கையில்
உள்ள வில்லைப் பார்த்தபோது; தாதை - தந்தையாகிய சடாயு; நோக்கி -
ஐயனைப் பார்த்து; ஒரு சிறியோன் ஊறு செய்ய - ஒரு அற்பன் தீமையைச்
செய்ய; (அதற்காக) (ஒன்றும் அறியாத) உலகை முனிதியோ - உலகைச்
சீறினாயோ ? (இது தகாது.
 ஆகையால்) உள்ளம்ஆறுதி - மனத்தில் அமைதி
பெறுக; என்று ஆற்றலின் - என்று கூறி தணிக்கச் செய்ததால்; சீற்றம் ஆறி
-
கோபம் தணிந்து.

     இதுவும் அடுத்தபாடலும் குளகம். தாதை என்றது சடாயுவை. ஒருவன்
துன்புறும் போது அதற்காகத் துடிக்காத உலகம் அழிய வேண்டும் என்று
அண்ணல் கருதினான். அவன் சடாயுவை நோக்கி 'நீ இக்கோள் உறக்
குலுங்கல் செல்லா உலகங்கள்.... அழியத்தக்கன' என்பான். அதற்கு சடாயு,
கூறியதை அறிக. (கம்ப. 3526) உரியவர் பால் சீற்றம் கொள். மற்றவரைப்
பழிப்பது பகைப்பது முறையல்ல என்றார்.                       (80)