5308.

' "எவ் வழி ஏகியுற்றான் ? யாண்டையான் ?
                          உறையுள் யாது ?
செவ்வியோய், கூறுக !" என்ன, செப்புவான் உற்ற
                          செவ்வி,
வெவ்விய விதியின் கொட்பால், வீடினன் கழுகின்
                           வேந்தன்;
எவ்விய வரி விற் செங் கை இருவரும், இடரின்
                             வீழ்ந்தார்.

(இராமபிரான்)

     செவ்வியோய் -செம்மைப்பண்புடையவளே ! அன்னான் - அநத்
இராவணன்; எவ்விழி ஏகி உற்றான் - எந்த வழியில் போனான்;
யாண்டையான் - அவன் தற்போது எங்கே உள்ளான்; உறையுள் யாது -
அவன் தங்கும் இடம் எது; கூறுக என்ன - கூறுவாயாக என்று கூற; கழுகின்
வேந்தன் -
கழுகுக்குல அரசனான சடாயு; செப்புவான் உற்ற செவ்வி -
அதற்கு மறுமொழி கூறத் தொடங்கும் போது; வெவ்விய - கொடுமையான;
விதியின் கொட்பால் - விதியின் சுழற்சியினாலே; வீடினன் - (சடாயு)
இறந்தான் (அதுகண்டு); எவ்விய - அம்புகளை ஏவும்; வரிவில் செங்கை -
கட்டமைந்த வில் ஏந்திய சிவந்த கையினை உடைய; இருவரும் - இராமனும்
இலக்குவனும்;  இடரின் வீழ்ந்தார் - துன்பத்தில் அழுந்தினர்.

     பிறன் பொருட்டுஉயிர் நீத்த பண்பு நோக்கிச் செவ்வியோய் ! என்று
சடாயு புகழப் பெற்றான். சம்பந்தப் பெருமான் விடைத்து வரும் இலங்கைக்
கோன் மலங்கச் சென்று இராமற் காய்ப் புடைத்தவனைப்
 பொருது
அழித்தான்என்பர். இப் பதிகம், கவிச்சக்கரவர்த்திக்கு மிகமிக
உதவியமை அறிக. சம்பந்தர் 'விடைத்துவரும் இராவணன்' என்றார்.
கவிச்சக்கரவர்த்தி 'வெங்கண் எரியப் புருவம் மீதுற விடைத்தான்' (கம்ப. 3255)
என்பர். மாரீசனை விடைத்து வந்த இராவணன் என்று திருமுறைக்குப் பொருள்
கூற வேண்டும். சேக்கிழாருக்கு அடுத்த படி திருமுறை வல்லாளன் கம்பனே.
இங்ஙனம் பலவுள. கம்பனுக்கு இராவணனின் முக்கோடி வாழ்நாளையும்
வழங்கியது திருமுறைகளே. கடன் என்றது இறுதிச் சடங்கை. சேக்கிழார்
பெருமான், நாவரசர் தாய் தந்தையர்க்குச் செய்த கடனை; மனம் தேற்றத் துயர்
ஒழிந்து பெருவானம் அடைந்தாற்குச் செய்கடன்கள் பெருக்கினார் என்பர்.
இராமபிரான் தாதையாகிய சடாயுவுக்குச் செய்த இறுதிச் சடங்கு முன்பு பேசப்
பெற்றது. 'கார் அகில் ஈட்டத் தோடும் சந்தனம் குவித்து... தருப்பையும் பூவும்
சிந்தினர் என்றும், ஏந்தினன் இருகை நன்றாய் ஏந்தினன் ஈமம் தன்மேல்,
சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனர் தலையின் சாரல் காந்து எரி காய
மூட்டிக் கடன் முறை கடவா வண்ணம் நேர்ந்தனன்" என்றும் (கம்ப. 3536-37)
என்று பெருமான் செய்த இறுதிக் கடன் கல்நெஞ்சும் உருகக் காட்டப் பெற்றது.
தென்புலத்தார் கடன் புதல்வரால் நிறைவு செய்யப் பெறும்; புதல்வர் இன்றி
இறந்த சடாயுவுக்கு இறைவனே புதல்வனாக வந்து இறுதிக்கடன் செய்தனன்.
இதனால் தியாகிகட்கு இறைவனே இறுதிக் கடனும் புரிவான் என்று அறிக.(81)