கலிநிலைத் துறை

5311.

'கன்மத்தைஞாலத்தவர் யார் உளரே கடப்பார் ?
பொன் மொய்த்ததோளான், மயல் கொண்டு
                         புலன்கள் வேறாய்,
நல் மத்தைநாகத்து அயல் சூடிய நம்பனேபோல்,
உன்மத்தன்ஆனான், தனை ஒன்றும்
                        உணர்ந்திலாதான்.

     பொன் மொய்த்ததோளான் - திருமகள் தங்கியதோள்களை உடைய
இராமபிரான்; ஒன்றும் - சிறிதும்; தனை உணர்ந்திலாதான் - தன்னை
அறிந்து கொள்ளாமல்; மயல் கொண்டு - பிராட்டியின் பால் காதல் மிகுந்து;
புலன்கள் வேறு ஆய் -
ஐம்புலன்களும் நிலைதிரிந்து (உமையைப் பிரிந்த);
நல்மத்தம் -
நல்ல ஊமத்தம் பூவையும்; நாகத்து அயல் - பாம்பின்
அருகில்;சூடிய - அணிந்த; நம்பனே போல் - சிவபிரானைப் போல;
உன்மத்தன்ஆனான் -
பித்தம் பிடித்தவன் ஆனான்;(ஆகையால்)
ஞாலத்தவர் - உலகில்உள்ளவர்களுள்; கன்மத்தை - வினையின்
நுகர்ச்சியை; கடப்பார் - வெற்றிகொண்டவர்; யார் உளர் - எவர்
உள்ளனர்.

     கடப்பார் -வெற்றி கொள்பவர். கடப்பார் எவரோ கருவினையை என்பர்
புகழேந்தியார். மொய்த்தல் - தங்குதல் (இருத்தல்) மொய்த்தல் என்பது
கொடுத்தலும் இருத்தலும் (அகராதி நிகண்டு. மொம் முதல் 5) சிவபிரானைப்
பித்தன் என்று பேசுவது மரபு.                               (84)