5313. | ' "குன்றே ! கடிது ஓடினை, கோமளக் கொம்பர் அன்ன என் தேவியைக்காட்டுதி;காட்டலைஎன்னின், இவ் அம்பு ஒன்றே அமையும்,உனுடைக் குலம் உள்ள எல்லாம் இன்றே பிளவா,எரியா, கரி ஆக்க" என்றான். |
குன்றே - மலையே நீ;கடிது ஓடினை - வேகமாக ஓடிப் போய் (தேடி); கோமளக் கொம்பர் அன்ன - அழகிய பூங்கொம்பு போலும்; என் தேவியைக் காட்டுதி - என்னுடைய தேவியைக் காண்பி; காட்டலை என்னின் - அவ்வாறு காட்டவில்லை என்றால்; உன் உடைக்குலம் - உன்னுடைய மலைக் கூட்டங் களையும்; உள்ள எல்லாம் - அம்மலையில் உள்ள அனைத்தையும்; இன்றே - இன்றைய தினமே; பிளவா - பிளந்து; எரியா - எரித்து; கரி ஆக்க - கரியாகச் செய்ய; இவ் அம்பு ஒன்றே - இந்த ஓர் அம்பு; அமையும் - போதியதாகும். என்றான் - என்று கூறினான். கோமளம் - இளமைஅழகு. கோமளக் கொழுந்து என்றும் (திருவாசகம்) கோமள ஆன்கன்று (திருவாய்மொழி) என்றும் கூறப் பெற்றன. இஃதொரு ராம நாடகம். (86) |