| 5318. | 'தணிகின்ற நம் சொல் தொடர் தன்மையது அன்று தன்மை; துணி கொண்டுஇலங்கும் சுடர் வேலவன், தூய நின்கண் அணி கண்டுழியே,அமுதம் தெளித்தாலும் ஆறாப் பிணி கொண்டது;பண்டு அது உண்டு ஆயினும், பேர்ப்பதுஅன்றால். |
துணிகொண்டு -பகைவரைத்துணித்தலை மேற்கொண்டு; இலங்கும் - விளங்கும்; சுடர்வேலவன் - வேலேந்திய இராமபிரான்; தூய - தூய்மையான; நின்கண் - உன்னுடைய கண்போலும்; அணி கண்டுழி - ஆபரணத்தைப் பார்த்த போது; அமுதம் தெளித்தாலும் - அமிர்தத்தையே தெளித்த போதிலும்; ஆறாப் பிணி - தணியாத நோய்; கொண்டது - பற்றிக் கொண்டது; அது - அந்தப் பிணி யானது; பண்டு உண்டு- முன்பே உள்ளது; ஆயினும் - எங்கனம் ஆராய்ந்து; பேர்ப்பது அன்று - போக்கத்தக்கது அன்று; தன்மை - அப்பிணியின் தன்மை; தணிகின்ற நம் சொல் - தாழ்ந்த நம் சொல்லால்; தொடர் தன்மையது அன்று - பின்பற்றிச் சொல்லும் தன்மையுடையது அன்று. பிரிவாற்றாமையால் இதயத்தில் உள்ள அவலத்தைப் பிணி கொண்டது; அப்பிணி அமுதத்தைத் தெளித்தாலும் மாறாதது. அது பேர்ப்பது அன்று என்க. (91) |