'அயர்வு உற்று, அரிதின் தெளிந்து, அம் மலைக்கு அப் புறத்து ஓர் உயர் பொன்கிரி உற்று உளன், வாலி என்று ஓங்கல் ஒப்பான், துயர்வு உற்று அவ்இராவணன் வாலிடைப் பண்டு தூங்க, மயர்வு உற்றபொருப்பொடு, மால் கடல் தாவி வந்தான்.
அயர்வு உற்று -சோர்ந்து; அரிதின் தெளிந்து - மிகவும் சிரமப்பட்டுத் தெளிந்து (இவை இராமன் நிலை); அம்மலைக்கு - அந்த இருசியமுக மலைக்கு; அப்புறத்து ஓர் - அந்தப் பக்கத்தில் உள்ள ஒரு; உயர் - உயர்ந்த; பொன்கிரி உற்றுளன் - அழகிய மலையில் இருப்பவனும்; வாலி என்று ஓங்கல் ஒப்பான் - வாலி என்னும் பெயருடன் மலையை ஒத்திருப்பவனும்; துயர்வு உற்று - துன்பம் அடைந்து; அவ் இராவணன் - அந்த இராவணன்; வாலிடை - தன் வாலின்கண்ணே; பண்டு தூங்க - முன்பு தொங்கும்படி (பிணித்து); மயர்வுற்ற - மயக்கம் அடைந்த; பொருப்பொடு - மலைகளையும்; மால் கடல் - பெரிய கடல்களையும்; தாவி வந்தான் - தாவி வந்தவனும். (92)