5321.

'பின் கூடியசேனை பெருந் திசை பின்ன ஆக,
வி்ல் கூடு நுதல்திரு ! நின்னிடை மேவ ஏவி,
தெற்கு ஊடுருவக்கடிது ஏவினன் என்னை' என்ன,
முன் கூடினகூறினன், காலம் ஓர் மூன்றும்
                               வல்லான்.

     வில்கூடும் -வில்லைஒத்த; நுதல் திரு - நெற்றியை உடைய
திருமகளே; பின் கூடிய சேனை - காலம் தாமதித்து வந்த சேனையை;
பெருந்திசை பின்ன ஆக - பெரிய திசைகள் பின் ஆகும்படி; நின் இடை
மேவ ஏவி -
நீ இருக்கும் இடத்தை அடையக் கட்டளையிட்டு விட்டு; தெற்கு
ஊடுருவ -
தென் திசையைத் துருவிச் செல்ல; என்னை - அடியேனை; கடிது
ஏவினன் -
வேகமாக ஏவினன்; என்ன - என்று; முன் கூடின - முன்பு
நிகழ்ந்தவற்றை; காலம் ஓர் மூன்றும் வல்லான் - முக்காலமும் அறியவல்ல
அனுமன்; கூறினன் - சொன்னான்.

     வில் கூடு -இதில் உள்ள கூடு உவம வாசகம்.            (94)