கடல்கடந்தவாற்றைச் சீதை வினவலும் அனுமன் விடையும் | 5323. | நையுறுசிந்தையள், நயன வாரியின் தொய்யல் வெஞ்சுழியிடைச் சுழிக்கும் மேனியள், 'ஐய ! நீஅளப்ப அரும் அளக்கர் நீந்தினை எய்தியது எப்பரிசு ? இயம்புவாய் !' என்றாள். |
நைஉறு சிந்தையள்- நைதல்பொருந்திய உள்ளத்தை உடைய பிராட்டி; நயன வாரியின் தொய்யல் - கண்ணீர்ப் பெருக்கின்; வெம் சுழியிடை - கொடிய சுழிகளுக்கு இடையே; சுழிக்கும் மேனியள் - சுழலும் மேனியை உடையவளாய்; (அனுமனை நோக்கி) ஐய ! - என் தந்தையே; நீ அளப்பரும் அளக்கர் - நீ அளவிட முடியாத கடலை; நீந்தனை எய்தியது - கடந்து வந்தது; எப்பரிசு - எந்த விதத்தால்; இயம்புவாய் என்றாள் - கூறுவாயாக என்று வினவினள். தொய்யல் -நீர்ப்பெருக்கு (அண்ணாமலை - பதி) உயர்வு நவிற்சியால் பிராட்டி கண்ணீர்ப் பெருக்கில் உண்டான சுழிகளில் தத்தளித்தாள். 'கலங்கு தெண் திரையிற்றாய கண்ணின் நீர்க்கடலில் கண்டேன்', (கம்ப. 6041) என்று அனுமன் பெருமான்பால் பேசுவான். கடற்சுழி பட்டவர் போல் பிராட்டி தத்தளித்தாள் என்க. (96) |