5325.

'இத் துணைச் சிறியது ஓர் ஏண் இல் யாக்கையை;
தத்தினை கடல்;அது, தவத்தின் ஆயதோ ?
சித்தியின்இயன்றதோ ? செப்புவாய்' என்றாள்-
முத்தினும்,நிலவினும், முறுவல் முற்றினாள்.

     முத்தினும் -முத்துக்களை விடவும்; நிலவினும் - நிலவை விடவும்
(அழகிய); முறுவல்  - புன்னகையால்; முற்றினாள் - சிறப்புற்ற பிராட்டி
(அனுமனை நோக்கி); இத்துணைச் சிறியது - இவ்வளவு சிறியதான; ஓர் -
ஒரு; ஏணில் யாக்கையை - வலிமையற்ற உடலை உடைய நீ; கடல்
தத்தினை  -
கடலைக் கடந்து வந்துள்ளாய்; அது - அச்செயல்; தவத்தின்
ஆயதோ -
தவத்தினால் உண்டானதா ? சித்தியின் இயன்றதோ -
சித்திகளால் நிகழ்ந்ததா? என்றாள் - என்று வினவினாள்.

     முத்துக்களைவிடவும், நிலவை விடவும், புன்னகை சிறப்புற்றுள்ளது.
பிராட்டி, அனுமனைத் தவசீலனா சித்தனா என்று வினவினள். தவமும்
சித்தியும் பெற்றால் அன்றி அருஞ்செயல் செய்ய ஒண்ணாது என்பது குறிப்பு.
தவம் நிலையானது. சித்தி தற்காலிகம். வேறுபாடு அறிக. சித்துக்கள்
வல்லாரைத் தவத்தர் என்று கருதி நம்பியவர் பலர். பிராட்டி அனுமனை
உரைத்துப் பார்க்கிறாள். சித்தியா, தவமா என்று பிராட்டி வினவினள். ஐயன்,
யான் தவத்தனும் அல்லன்; சித்தனும் அல்லன். அண்ணலின் அருளைச்
சுமந்தவன் என்று கூறுவான். 'அருள் அது ஆம் என மீண்டனன். (கம்ப.
5335) என்று திருவடி கூறப்பெறுவதை, ஆய்க. இது நீண்ட உருவத்தைச்
சுருக்குமாறு பிராட்டி கூறிய உத்தரவை அனுவதித்ததைக் கூறியதாகச்
கொள்வதே கவிதைப் போக்கிற்கு ஏற்றது. சித்தியினும் சிறந்தது தவம்.
தவத்தினும் சிறந்தது அருள் ஆழ்வார்களும் நாயன்மார்களும் சித்தர் அல்லர்
தவத்தர் அல்லர். அருளாளர் என்பதை அறிக.                   (98)