5326.

சுட்டினன்,நின்றனன் - தொழுத கையினன்;
விட்டு உயர்தோளினன்; விசும்பின் மேக்கு உயர்
எட்ட அரு நெடுமுகடு எய்தி, நீளுமேல்
முட்டும் என்று,உருவொடு வளைந்த மூர்த்தியான்.

     தொழுத கையினன்- கூப்பியகைகளை உடைய அனுமன்; விட்டு -
இயல்பான நிலை நீங்கி; உயர் தோளினன் - உயர்ந்த தோள்களை
உடையவனாய்; விசும்பின் மேக்கு - ஆகாயத்துக்கு மேலே; உயர் -
உயர்ந்துள்ள; எட்டரு நெடுமுகடு - அணுக முடியாத நீண்ட அண்ட
முகடானது; எய்த - தன் பக்கல் வர; நீளுமேல் - தன் மேனி உயருமானால்;
முட்டும் -
அம் முகடு இடிக்கும்; என்று - என்று கருதி; உருவொடு
வளைந்த -
திருமேனியுடன் குனிந்த; மூர்த்தியான் - தலையை
உடையவனாய்; சுட்டினன் நின்றனன் - தன் வடிவத்தைப் பிராட்டிக்குச்
சுட்டிக்காட்டி நின்றான்.

     தொழுத கையினன்,சுட்டினன் நின்றனன் என்ற முடிக்க. முகடு முட்டும்
என்று தலை குனிந்து நின்றனன் என்க. மூர்த்தம் என்பது தலை. மூர்த்தத்தை
உடையவன் மூர்த்தி. முசலம்... மூர்த்தமேற் படுதலும்....துஞ்சினன்..... என்னும்
சேதுபுராணம் (இலக்கும...21) (உருவொடு வளைந்த) மூர்த்தி - என்பதற்கு
வடிவம் உடையவன் என்று பொருள் கூறப் பெற்றது. உரு என்றாலும் வடிவம்
என்றுதானே; உருவொடு வளைந்த மூர்த்தி் என்பதில் உருவத்தையும்
வடிவத்தையும் வேறுபடுத்த வேண்டாமா - ஏற்பின் கொள்ளலாம். வானம்
முட்டும் என்று அனுமன் தலையை வளைத்து நிற்பதுதானே இயற்கை.
இவ்வுரையை வழங்கியவர் மகாவித்துவான் திரிசிரபுரம் வி. கோவிந்தப்
பிள்ளை அவர் நாமம் வாழ்க. (பக்கம் 192) கம்பன் அகராதியும் இவ்வுரையை
ஆதரிக்கிறது.                                            (99)