| 5327. | 'செவ் வழிப் பெருமை என்று உரைக்கும் செம்மைதான் வெவ் வழிப்பூதம் ஓர் ஐந்தின் மேலதோ ? அவ் வழித்துஅன்று எனின், அனுமன் பாலதோ ? எவ் வழித்துஆகும் ?' என்று எண்ணும் ஈட்டதே. |
(அனுமன் பேருரு) செவ்வழி -செவ்விதாகிய வழியில் (அமையும்); பெருமை என்று - சிறப்புக்கள் உள்ளது என்று; உரைக்கும் செம்மை - பேசப்படும் உயர்வு; வெவ்வழி - இறைவன் காட்டும் வழியில் இயங்கும்; ஓர் - ஒப்பற்ற; பூதம் ஐந்தின் மேலதோ - ஐந்து பூதங்களைச் சார்ந்துள்ளதா; அவ்வழித்து அன்றுஎனின் - அப் பூதங்கள் பால் அவ் உயர்வு இருப்பது அன்று என்றால்;அனுமன் பாலதோ - அனுமனைச் சார்ந்துள்ளதா (அஃது); எவ்வழித்துஆகும் - எவ்விடத்தில் உளதாகும்; என்று எண்ணும் - என்று ஆராயும்;ஈட்டது - வலிமை உடையது. பேர் உரு ஈட்டதுஎன்க. வெவ்வழி, வெம்வழி, விரும்பும் வழி இறைவன் காட்டலின் வெவ்வழி என்க. பூதங்கள் இறைவன் வழியில் இயங்கும். அனுமனும் இறைவன் வழி இயங்குவான். உயர்வு அனுமனுக்கா பூதங்கட்கா. 'நிலனும், விசும்பும், வளியும் தீயும் நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கை போல பொறுத்தலும் சூழ்ச்சியத கலமும் வலியும் தெறலும் அளியும் உடைய' சேரலாதனைப் பற்றிப் புறம் பேசும். (புறம் 2). பொறுத்தல் முதலாய பண்புகள் மிக்கிருத்தலின் அனுமன் பூதங்களினும் பேராற்றல் படைத்தவன் என்பது குறிப்பு. 'பூதங் கண்ணிய வலியெலாம் ஒரு தனி பொறுத்தான்' (கம்ப. 6189) என்று இரண்யனும் பூதம்நான்குடைய ஆற்றலான் என்று வாலியும் புகழப்படுவர். (100) |