5329.

கண்தலம்அறிவொடு கடந்த காட்சிய,
விண்தலம் இருபுடை விளங்கும் மெய்ம்மைய,
குண்டலம்இரண்டும், அக் கோளின் மாச் சுடர்
மண்டலம்இரண்டொடும், மாறு கொண்டவே.

     அறிவொடு -மக்களின்அறிவையும்; கண்தலம் - கண்களையும்;
கடந்த காட்சிய -
கடந்துள்ள காட்சியை உடையனவும்; விண்தலம் -
ஆகாயத்தின்; இருபுடை - இரண்டு பக்கங்களிலும்; விளங்கும் மெய்ம்மைய
-
பிரகாசிக்கும் இயல்பை உடையனவும்; (ஆன) குண்டலம் இரண்டும் -
அனுமனின் இரண்டு குண்டலங்களும்; அக்கோளின் - அந்த
நவக்கிரங்களுக்குள்ளே; மாச்சுடர் - மிக்க ஒளியுடன் கூடிய; மண்டலம்
இரண்டொடும் -
இரண்டு சூரிய சந்திர மண்டலங்களுடன்; மாறு
கொண்டவே -
மாறுபாடு கொண்டுள்ளன.

    குண்டலம்வருணிக்கப்படுவதன் மூலமாக அனுமனின் பேருரு
பேசப்படுகிறது. பொலன் கொள் சோதி குண்டல் வதனம் என்று அனுமப்
படலம் பேசும் (32) அனுமன் குண்டலம் இராமன் மட்டும் அறிவான். மற்றவர்
அறியார், என்று கூறும் வழக்கு உண்டு. அனுமனின் குண்டலத்தை வில்லி,
எம்பிரான் தனக்கு ஒழிய மற்று யாவர்க்கும் தெரியா... குண்டலம் என்பர்.
கோள் என்றது நவக்கிரகங்களை மண்டலம் இரண்டு என்றது அக்கோள்களிற்
சிறந்த சூரிய சந்திரர்களை.                                  (102)