5330. | 'ஏண் இலதுஒரு குரங்கு ஈது' என்று எண்ணலா ஆணியை, அனுமனை,அமைய நோக்குவான், 'சேண் உயர்பெருமை ஓர் திறத்தது அன்று' எனா, நாண் உறும்-உலகுஎலாம் அளந்த நாயகன். |
உலகு எலாம்அளந்த நாயகன் - எல்லா உலகங்களையும்அளந்த திருமால்; ஈது - இது; ஏண் இலது - வலிமை இல்லாதது; ஒரு குரங்கு - ஒருஅற்பக் குரங்கு; என்று எண்ணலா - என்று கருத முடியாத; ஆணியை அனுமனை - அஞ்சுரு வாணி போலும் அனுமனை; அமைய நோக்குவான் - நன்றாகப் பார்த்து; சேண் உயர் பெருமை - ஆகாயத்தை அளாவிய இவர் சிறப்பு; ஓர் திறத்தது அன்று - ஒரு வகையானது அன்று; எனா - என்று கூறி; நாண் உறும் - வெட்கம் அடைவான். உலகு அளந்ததிருமால், அனுமனை நன்கு பார்த்து, இவன் சிறப்பு ஒருவகையானது அன்று என்று கூறி நாணம் அடைவான். ஆணி என்பதற்கு 'அஞ்சுருவாணி' என்று கூறவேண்டும். தேரின் நடுவில் எல்லாவற்றுக்கும் நடுநாயகமாக ஒரு நீண்ட கோல் இருக்கும். அது ஆணி என்று பேசப்படும். 'தடையற்ற தேரில் அஞ்சுருவாணி போலவே தள்ளில் அசையாது நிற்கும்' என்பர் தாயுமானவர் (மௌனகுரு 9) 'ஆணியாய பழி' என்னும் (கம்ப. 3561) அயோமுகிப் பாடலுக்கு அமைந்த பழைய உரை காண்க. அது ஆணி - அஞ்சுருவாணி என்று வரைந்தது. உலகு எலாம் அளந்த நாயகன் - சூரியன் என்று பொருள் கூறுவது நேரிது. திருமால் அனுமன் பேருருக் கண்டு நாணான். மகிழ்வான். அவன் தன் தூதனைக் கண்டு சிறப்பியாமல் நாணுவானோ... (103) |