5332.

எழுந்துஉயர் நெடுந்தகை இரண்டு பாதமும்
அழுந்துறஅழுத்தலின், இலங்கை ஆழ் கடல்
விழுந்தது;நிலமிசை விரிந்த வெண் திரை
தழைந்தன;புரண்டன மீனம்தாம் எலாம்.

     எழுந்து - நிமி்ர்ந்து; உயர் - உயர்கின்ற; நெடுந்தகை -
பெருந்தகையான அனுமனின்; இரண்டு பாதமும் - இரண்டு திருவடிகளும்;
அழுந்து உற - ஆழத்தில் புக; அழுத்தலின் - அழுத்திய காரணத்தால்;
இலங்கை - இலங்கையானது; ஆழ் கடல் - ஆழமான கடலில்; விழுந்தது -
மூழ்கியது; விரிந்த வெண்திரை - பரந்த வெண்மையான கடல் அலைகள்;
நிலமிசை - பூமியின் கண்; தழைந்தன - பெருகின; மீனம் எலாம் - எல்லா
மீன்களும்; புரண்டன - (அங்கங்கே) துள்ளின.

     அனுமனின்திருவடிகள் அழுத்திய காரணத்தால் இலங்கை கடலில்
மூழ்கியது. கடல் அலைகள் பூமியில் பெருகின. மீன்கள் துள்ளின. இது
கற்பனை, நிகழ்ச்சியன்று. நெடுந்தகை என்பதற்குச் சாமுண்டி தேவ நாயகர்
அளத்தற்கரிய தன்மை உடையாய் என்று விளக்கம் செய்தார்' அரவணையாய்
என்னும் நெடுந்தகை நின்னையே யாம்' (புறப்பொருள் 191)           (105)