| 5344. | 'தம்பன்,தூமத் தனிப் பெயரோன், ததியின் வதனன், சதவலி என்று இம்பர் உலகோடுஎவ் உலகும் எடுக்கும் மிடுக்கர், இராமன் கை அம்பின் உதவும்படைத் தலைவர்; அவரை நோக்கின், இவ் அரக்கர், வம்பின்முலையாய் ! உறை இடவும் போதார்; கணக்கு வரம்பு உண்டோ ? |
வம்பின்முலையாய் - கச்சணிந்த தனங்களைஉடைய அம்மையே; தம்பன் - ; தூமத் தனிப் பெயரோன் - தூமன் என்ற ஒப்பற்ற பெயரை உடையவன்; ததியின் வதனன் - ததிமுகன்; சதவலி - ; என்று - என்று; இம்பர் உலகோடு - இந்த உலகத்தையும்; எவ்வுலகும் - எந்த உலகத்தையும்;எடுக்கும் மிடுக்கர் - சுமக்கின்ற ஆற்றலுடையவர்; (அவர்கள்) இராமன் -இராமபிரானின்; கை அம்பின் - கையிலுள்ள அம்பைப் போல; உதவும் -(ஏவியதைச் செய்ய) உதவுகின்ற; படைத்தலைவர் - சேனைத்தலைவர்கள்; கணக்கு வரம்பு உண்டோ - அவர்களின் எண்ணிக்கைக்கு எல்லை உள்ளதா? அவரை நோக்கின் - அப்படைத் தலைவர்களைப் பார்க்கும்போது; இவ்அரக்கர் - இந்த அரக்கர்கள்; உறையிடவும் போதார் - உறையாகவைப்பதற்கும் போதமாட்டார்கள். தம்பன்முதலானவர்கள் இராமபிரான் கை அம்பு போல உதவும் படைத் தலைவர்கள். இந்த அரக்கர்கள் அந்த படை வீரர்களுக்கு உறையாக வைப்பதற்கும் போதமாட்டார்கள். உருக்காட்டுப்படலம் மிகைப்பாடல்கள் 117-1 என்ற எண்ணுள்ள பாடல் இங்கு அடுத்து இருப்பின் பொருள் தொடர்பு - அடுத்த படலத் தொடர்பு இரண்டுக்கும் பொருந்தும். அப்பாடலின் திரண்ட கருத்து:- சிரஞ்சீவியாகிய அனுமன் மேலும் கூறுவான் இராமன் பால் சென்று வணங்கி உனது துன்பத்தைச் சிறிதளவு உணர்த்தும் வரைதான் அரக்கர் கூட்டம் உளதாகும். உணர்த்த உணர்ந்த அளவிலேயே இவ்வரக்கர் கூட்டமும் இலங்கைமாநகரும் குரங்கின் கைப் பூமாலையாகப் பிய்த்து எறியப் பட்டுவிடும் என்று சொல்லி வணங்கினான். பின்னரும் ஒரு வார்த்தை சொல்வதற்கு மனத்தில் சிந்தித்தான். (117) |