5351.

'புண் தொடர்வு அகற்றிய புயத்தினொடு புக்கேன்,
விண்டவர்வலத்தையும் விரித்து உரைசெய்கேனோ ?
"கொண்டுவருகிற்றிலென்; உயிர்க்கு உறுதி
                                கொண்டேன்;
கண்டுவருகிற்றிலென்" எனக் கழறுகேனோ ?

(அம்மையே)

     உயிர்க்கு உறுதிகொண்டேன் - உயிருக்குப்பாதுகாப்பைத் தேடிக்
கொண்டயான்; புண் தொடர்வு - போரால் உண்டாம் விழுப்புண்களின்
சம்பந்தத்தை; அகற்றிய புயத்தி னொடு - விலக்கிக் கொண்ட தோள்களுடன்;
புக்கேன் - இராமபிரான் சந்நிதானத்தை அடைந்து; விண்டவர் வலத்தை -
பகைவர்களின் பலத்தை; விரித்து உரை செய்கேனோ - விவரித்துப்
பேசுவேனோ ? (அல்லது) (யான்); கண்டு வருகிற்றிலென் - பிராட்டியைக்
கண்டு வரும் ஆற்றல் பெற்றேன் இல்லை; (அதனால்) (பிராட்டியை) கொண்டு
வருகிற்றிலென் -
கொண்டு வரும் பாக்கியம் பெற்றேன் இல்லை; என
கழறுகேனோ -
என்று பொய் கூறுவேனா.

     வலத்தையும்என்பதில் உள்ள 'உம்' அசை. மடத்தகை அவளொடும்
வதுவை நாட்டி (சிந்தா 1173) இங்கு இனியர் 'உம்மை அசை' என்று
வரைந்தார். அரக்கர்கள் வன்மை உடையவர்கள். அதனால் பிராட்டியைக்
கண்டிலேன்; அதனால் வெறுங்கையுடன் வந்தேன் என்று பொய் மொழி
கூறட்டுமா என்று அனுமன் வருந்திக் கூறினான். உறுதி - பாதுகாப்பு.
மன்னுயிர்க்கு உறுதி செய்வான் மலரடி சுமந்து வாழ்தி (கம்ப. 4090)     (7)