5352. | ' "இருக்கும் மதிழ் சூழ் கடி இலங்கையை இமைப்பின் உருக்கி எரியால், இகல் அரக்கனையும் ஒன்றா முருக்கி, நிருதக்குலம் முடித்து, வினை முற்றிப் பொருக்க அகல்க"என்னினும், அது இன்று புரிகின்றேன். |
(அனுமனே நீ) மதில் சூழ் -மதில்களால் சூழப்பட்டு; கடி - காவலுடன்; இருக்கும் இலங்கையை - இருக்கின்ற இலங்கை மாநகரை; இமைப்பின் எரியால் உருக்கி -இமைப்பதற்குள் நெருப்பினாலே உருக்கி விட்டு (பின்); இகல் - மாறுபாடு கொண்ட; அரக்கனையும் - இராவணனையும்; ஒன்றா - ஒருசேர; முருக்கி - அழித்து; நிருதக் குலம் முடித்து - அரக்கர் கூட்டத்தை ஒழித்து; வினைமுற்றி - செயலை நிறைவு செய்துவிட்டு; பொருக்க - விரைவாக; அகல்க என்னினும் - இலங்கையைவிட்டு நீங்குக என்று கட்டளை இட்டாலும்; அது - அச்செயலை; இன்று புரிகின்றேன் - இப்பொழுது செய்வேன். இலங்கைபொன்னால் அமைந்தது ஆதலின் அதனை 'உருக்குக' என்று கட்டளை இட்டால் நிறைவேற்றுவேன் என்றான். 'ஆடகத்தாரைகள் உருகி வேலையின் ஊடு புக்குற்றன' என்று மேலே பேசப்படும் (கம்ப. 5953.) பொருக்க - விரைவாக. பொருக்க நும்வினை போயதும் (தேவாரம் - நாவரசர் 144-11) முடித்து - அழித்து. 'வேந்தர் குலமும்... குழலும் முடியாது இராள்' என்பர் வில்லியார் (கிருட்டினன் தூது 48) (8) |