அனுமன் வேண்டுகோளைசீதை மறுத்து உரைத்தல் 


கலிவிருத்தம்

5355.

ஏய நல்மொழி எய்த விளம்பிய
தாயை முன்னியகன்று அனையான்தனக்கு,
'ஆய தன்மைஅரியது அன்றால்' என,
தூய மென்சொல்இனையன சொல்லினாள்;

     நன்மொழி -நன்மைதரும் சொற்களை; ஏய - பொருத்தமாகவும்;
எய்த - நன்றாகவும்; விளம்பிய - கூறிய; தாயின் முன்னிய - தாயைஎதிரேகண்ட; கன்று அனையான் தனக்கு - இளங்கன்று போலும்
அனுமனுக்கு;(பிராட்டியானவள்) ஆயதன்மை - நீ கூறிய அச்செயல்; அரியது
அன்று -
உன்னால் செய்ய முடியாதது அன்று; என - என்றுகூறிவிட்டு;
இனையன -இப்படிப்பட்ட; தூயமென்சொல் - தூய்மையான மென்மையான
சொற்களை;சொல்லினாள் - கூறினாள்.

     கன்று அனையான்தனக்குச் சொல்லினாள் என்று முடிக்க. ஆய தன்மை
- அச்செயல். 'மான யானை..... என்ன தன்மை பண்ணுமே' (கம்ப. 9385)
பிராட்டி பசுவைப் போல இருந்தாள். அனுமன் அதன் கன்று போல் இருந்தான்
என்க. இராமபிரான் சிற்றன்னைபால் கொண்ட பாசம் 'அந்தி வந்து அடைந்த
தாயைக் கண்ட ஆன் கன்று '(கம்ப. 1598) என்னும் தொடரால் பேசப் பெற்றது.
இவ்விருத்தம் மா - விளம் - விளம் - விளம் என்னும் சீர்களைப் பெற்று
வரும். இதனைக் கம்பன் அடிப் பொடி அவர்கள் 'கட்டளைக் கலிப்பா'
என்றே குறிப்பார். நேர் - 11; நிரை - 12; (மணிமலர் 76).            (11)