5361.

'பொன் பிறங்கல் இலங்கை, பொருந்தலர்
என்பு மால் வரைஆகிலதேஎனின்,
இற் பிறப்பும்,ஒழுக்கும், இழுக்கம் இல்
கற்பும், யான்பிறர்க்கு எங்ஙனம் காட்டுகேன் ?

     பொற்பிறங்கல்இலங்கை - பொன்மலையில் அமைந்தஇலங்கை
மாநகரம்; பொருந்தலர் - அறத்துடன் பொருந்தாத அரக்கர்களின்; என்பு
மால்வரை ஆகிலதே எனின் -
பெரிய எலும்பு மலையாக ஆகாமற்
போனால்; யான் - நான்; இற்பிறப்பும் - என்னுடைய சிறந்த
குடிப்பிறப்பையும்; ஒழுக்கும் - ஒழுக்கத்தையும்; இழுக்கம் இல் கற்பும் -
சிதைவு இல்லாத கற்பையும்; பிறர்க்கு - உலக மக்களுக்கு; எங்ஙனம்
காட்டுகேன் -
எப்படித் தெளிவுபடுத்தி அறிவிப்பேன்.

     மேருமலையிலிருந்துவாயு தேவனால் வீசி எறியப்பட்ட திரிகூட
மலையில் இலங்கை அமையப் பெற்றது. ஆதலின் பொற்பிறங்கல் இலங்கை
என்று பேசப்பட்டது. மேருமலையைப் பொன்மலை என்பது மரபு. 'கற்புடைத்
தேவியை விடாது காத்தியேல் எற்புடைக் குன்றமாம் இலங்கை' என்று
வீடணன் கூறியதாக மயிந்தன் பேசினான் இ.கோ. பிள்ளை அவர்கள் பொற்
பிறங்கல் இலங்கை என்பதற்கு பொன் மலையான இலங்கை என்று உரை
வகுத்தார். 'இலங்கை வெற்பு' என்று பேசப்படுகிறது. (கம்ப. 6035) அவர்,
பொன்மலை எலும்புமலையாக வேணும் என்றபடி என்று எழுதினார்.    (17)