5362. | 'அல்லல்மாக்கள் இலங்கையது ஆகுமோ ? எல்லை நீத்தஉலகங்கள் யாவும், என் சொல்லினால்சுடுவேன்; அது, தூயவன் வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன். |
அல்லல் -(எலும்புமலையாகப் போகும்) துன்பம்; மாக்கள் - விலங்கு போன்றவர்கள் வாழும்; இலங்கையது ஆகுமோ - இலங்கையளவுடன் நின்று விடுமா; எல்லை நீத்த - (அறத்தின்) வரம்பைக் கடந்து போகும்; உலகங்கள் யாவும் - எல்லாவுலகங்களையும்; என் சொல்லினால் - என்னுடைய சொல்லினாலேயே; சுடுவேன் - சுட்டெரித்து விடுவேன்; அது - அவ்வாறு செய்வது; தூயவன் - தூயவனாகிய இராமபிரானின்; வில்லின் ஆற்றற்கு - வில்லினுடைய வலிமைக்கு; மாசு என்று - களங்கம் உண்டாக்கும் என்று (அதை); வீசினேன் - ஒதுக்கித் தள்ளினேன். இ.கோ.பிள்ளைஅவர்கள் பெண்ணால் வெற்றி பெறுவது ஆண் பிள்ளைக்குப் புகழன்று என்று கருத்துரை வரைந்தார் சிந்தாமணி (1752) இக் கருத்தைப் பேசும். அல்லல், இலங்கையது ஆகுமோ என்று சேர்க்க. அல்லல் இலங்கைக்கு அடைமொழியாகப் பேசிய உரையே அதிகம். அல்லல் எழுவாயாகக் கொள்ளும் உரை என் தந்தையார் கூறியவுரை. இ.கோ.பிள்ளை அவர்கள், அல்லல் என்பதை மாக்கட்கு அடைமொழி ஆக்கினும், தெரிந்தோ தெரியாமலோ இலங்கை அளவில் முடிவு பெறுமோ அல்லவா என்று எழுதினார். (18) |