5364.

'தீண்டினான்எனின், இத்தனை சேண் பகல்
ஈண்டுமோ உயிர்மெய்யின் ? "இமைப்பின்முன்
மாண்டுதீர்வென்" என்றே, நிலம் வன் கையால்
கீண்டு கொண்டு,எழுந்து ஏகினன், கீழ்மையான்.

     கீழ்மையான்- இழிந்த பண்புடைய இராவணன்; தீண்டினான் எனின்
-
என்னைத் தொட்டிருப்பானேயானால்; இத்தனை சேண் பகல் - இவ்வளவு
நீண்ட நாட்கள்; உயிர் - இராவணனின் உயிரானது; மெய்யின் ஈண்டுமோ -
அவன் உடலில் தங்கியிருக்குமா ?; (இராவணன்) இமைப்பின் முன் - கண்
இமைக்கும் நேரத்தில்; மாண்டு தீர்வென் என்றே - அழிந்து ஒழிவேன்
என்று கருதியே; வன்மையால் - பேராற்றலால்; நிலம் - யான் இருந்த
பூமியை; கீண்டு கொண்டு - பெயர்த்து எடுத்துக் கொண்டு; ஏகினன் -
இலங்கைக்குச் சென்றான்.

    இராவணன்என்னைத் தொட்டிருந்தால் என் உடம்பில் உயிர் இருக்குமா;
நான் இறந்து படுவேன் என்று கருதித்தான் என்னை நிலத்துடன் பெயர்த்து
வந்தான் என்றும் பொருள் கொள்ள இடம் உண்டு. இராவணன் தனக்கு அழிவு
வாராதிருத்தலையே எண்ணினான் என்பதை அடுத்தபாடல் உறுதி செய்கிறது.
அனுமன், என் தோளில் ஆரோகணித்தலை வெறுத்தாய். ஆனால் இராவணன்
உன்னை எப்படிக் கொணர்ந்தான் என்று கேட்டால் என்ன செய்வதென்று
கருதி இங்ஙனம் பேசினாள் என்று கூறும் மரபு உண்டு.               (20)