| 5369. | 'தீர்விலேன், இது ஒரு பகலும்; சிலை வீரன் மேனியைமானும் இவ் வீங்கு நீர் நார நாள்மலர்ப்பொய்கையை நண்ணுவேன், சோரும் ஆர்உயிர் காக்கும் துணிவினால். |
சோரும் -தளர்ச்சியடையும்; ஆர் உயிர் - அருமையான உயிரை; காக்கும் துணிவினால் - பாதுகாக்க வேண்டும் என்னும் உறுதிப் பாட்டால்; சிலைவீரன் மேனியை மானும் - கோதண்டபாணியை ஒத்திருப்பதும்; வீங்கு நீர் - பூரிக்கும் இயல்பைப் பெற்றிருப்பதும்; நாரம் நாண்மலர் - தண்ணீரையும் மலரையும் கொண்டிருப்பதும்; (ஆகிய) இப்பொய்கையை - இந்தத் தடாகத்தை; நண்ணுவேன் - அடைவேன்; ஒரு பகலும் - ஒரு நாளும்; இது தீர்விலேன் - இச் செயலிலிருந்து விலகேன். பொய்கையைப்பார்ப்பதால் உயிர்களிக்கும் என்பது குறிப்பு. மாயக் கூத்தா.... தாமரை நீள் வாசத்தடம்போல் வருவானே ஒரு நாள் காண வாராயோ என்னும் திருவாய்மொழி (8.6.1) இங்கு நினைவுக்கு வருகிறது. நாரம் - தண்ணீர். இறைவனைப் பொய்கையாகக் கூறுவது தமிழ் மரபு. பைங்குவளைக் கார்மலரைப் பார்த்துத் தெளிக. (திருவெம்பாவை) தசரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே (10.9.8) என்னும் திருவாய்மொழி அதை உறுதிப் படுத்தும். தீர்விலேன் என்பதற்குப் பர்ண சாலையினின்றும் நீங்கேன் என்று கூறப் பெற்றவுரை நன்றேல் கொள்க. (25) |